அரசியல் காழ்ப்புணர்ச்சியே இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை - ஆர்.பி.உதயகுமார் காட்டம்..

 
ஆர்.பி. உதயகுமார்

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

tn

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் அரசுக்கு 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும்,   தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கியதாகவும் எஸ். பி. வேலுமணி மீது புகார் எழுந்தது.  அதன் அடிப்படையில் அவருக்கு தொடர்புடைய 26 இடங்களிலும்,  அவரது நண்பர் சந்திரசேகர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.  இதேபோல் தேசிய மருத்துவக் குழு விதிக்கு  முரணாக திருவள்ளூரில் இயங்கும் தனியார் மருத்துவமனைக்கு சி. விஜயபாஸ்கர் முறைகேடாக சான்று தந்ததாக புகார் எழுந்ததையடுத்து,  அது தொடர்பான  ஆவணங்களை கைப்பற்ற சென்னை, சேலம், மதுரை,  தேனி,  புதுக்கோட்டை,  திருவள்ளூர் என 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது.

rb udhayakumar
 
இந்நிலையில், இந்தச்சோதனை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  கருத்து தெரிவித்திருக்கிறார்.   அதில், “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடமில்லை என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பின் மகிழ்ச்சியை மறைக்கவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை, மின்சார கட்டணம், சொத்து வரி உயர்வு உள்ளிட்டவைகளை மறைக்கவே திமுக இந்த சோதனைகளை நடத்தி வருகிறது.

எத்தனை சோதனைகள் நடத்தினாலும் அனைத்தும் சட்ட ரீதியாக எதிர்க் கொள்ளப்படும். முன்னாள் அமைச்சர்கள் சோதனைகளுக்காக மனம் தளராமல் கட்சி பணியாற்றுவர்கள். கண்ணியமிக்க காவல்துறை திமுக ஆட்சியில் ஏவல் துறையாக மாறி வருகிறது. அதிமுகவின் செல்வாக்கை சரிக்கவே முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை, லஞ்ச ஒழிப்பு சோதனையின் பின்னனியில் திமுகவின் திட்டம் கானல் நீராக போகும். பகல் கனவு பலிக்காது. சோதனை என்கிற பெயரில் காவல்துறை தவறாக வழி நடத்தப்பட்டு வருகிறார்கள்” என்று கூறியுள்ளார்.