“சுவடே இல்லாத வகையில் இடிக்கப்பட வேண்டும்” - தொல். திருமாவளவன்

 
thiruma

புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சியில் இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசித்து வரும் பகுதியில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்..  - டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு..

இந்த கிராமத்தில் சுமார் 30 தலித் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  இங்குள்ள சிறார்களுக்கு  சில நாள்களாக காய்ச்சல் ஏற்பட்டு,  தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்துள்ளனர்.  இதையடுத்து, சந்தேகமடைந்த மக்கள், தங்கள் குடியிருப்புக்குள் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் ஏறி பார்த்துள்ளனர்.அதில், மனிதக் கழிவு மிதந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  குடிநீரில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக வெள்ளனுர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட விசாரணை நடைபெற்று வந்தது. இருப்பினும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த நபர்கள்  இதுவரை கைது செய்யப்படவில்லை.  இதனிடையே இந்த  விவகாரம் தொடர்பாக  திருச்சி சரக டிஐஜி தரப்பில் ஏடிஎஸ்பி ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில் 11 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது.  இந்த நிலையில் இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். விசாரணையை தீவிரப்படுத்தவும், சம்பந்தப்பட்ட எதிரிகளை விரைவாக அடையாளம் கண்டு கைது செய்யவும் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படுவதாக அவர் கூறினார். 

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், “வேங்கைவயலில் மனிதக் கழிவு கொட்டப்பட்ட குடிநீர்த் தொட்டி பேரிழிவின் சின்னம். அது இருந்த சுவடே இல்லாத வகையில் இடிக்கப்பட வேண்டும்.ஆதிதிராவிட சமூகத்தினருக்குத் தனிக் குடிநீர்த் தொட்டி அமைப்பது கூடாது. தேநீருக்கு இரட்டைக் குவளை கூடாதெனில் குடிநீருக்கு இரட்டைத் தொட்டியும் கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.