தமிழகம், தமிழ்நாடு- சூசகமும் அரசியலும் சூழ்ச்சியும் உள்ளது: திருமாவளவன்

 
thirumavalavan

சட்டப்பேரவையில் உரையாற்ற ஆர்.என்.ரவி தகுதியானவர் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

thirumavalavan

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “சட்டப்பேரவையில் உரையாற்ற ஆர்.என்.ரவி தகுதியானவர் இல்லை. தொடர்ந்து சர்ச்சைக்கு வழிவகுக்கும் நோக்கில் பேசி வருகிறார். ஒரு ஆளுநர் என்ன செய்ய வேண்டும் அதை செய்யாமல் ஆர்.எஸ்.எஸ் பணிகளை செய்கிறார். தொடர்ந்து குதர்க்கமான கருத்துகளை கூறிவரும் ஆளுநர், பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்எஸ்எஸ் பணிகளை செய்யலாம். தமிழ்நாடு, தமிழகம் என்பதற்கு எந்த வேறுபாடும் இல்லை.தாய் என்றாலும் அம்மா என்றாலும் ஒரே பொருள்தான் உள்ளது. 

தமிழகம், தமிழ்நாடு என்பது சொல் விளையாட்டு அல்ல, இதில் சூசகமும் அரசியலும் சூழ்ச்சியும் உள்ளது. பிரதேசம் என்றாலும் ராஷ்டிரியம் என்றாலும் நாடு என்பதுதான் பொருள். இந்த தேசத்திற்கு இந்து ராஷ்ட்ரா என பெயர் சூட்ட நினைக்கிறார்கள்.மகாராஷ்டிராவிற்கு சென்று பாரதம் என்றுதான் கூற வேண்டும் என்று சொல்ல இவர்களுக்கு துணிச்சல் உண்டா? கவர்னர் ஆர்.என்.ரவி, கவர்னரா? அல்லது ஆர்.எஸ்.எஸ் தொண்டரா? தமிழ்நாடு எனும் தனிநாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்கு. 
விடுதலைச் சிறுத்தைகள் இருக்கும் வரையிலும், திருமாவளவன் இருக்கின்ற வரையிலும் சாதீய வாதிகளும், மத வாதிகளும் தமிழகத்திலேயே காலூன்ற முடியாது” எனக் கூறினார்.