குருமூர்த்தியை ரிசர்வ் வங்கி பதவியிலிருந்து நீக்கவேண்டும் - நிர்மலா சீதாராமனுக்கு திருமா வலியுறுத்தல்

 
த்

பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றுகிறவர்களை கழிசடைகள் என இழிவாகப் பேசிய துக்ளக் குருமூர்த்தியை இந்திய ஒன்றிய அரசு ரிசர்வ் வங்கியின் அலுவல் சாரா இயக்குநர் பதவியிலிருந்து  நீக்கவேண்டுமென நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு  வலியுறுத்தி இருக்கிறார் திருமாவளவன் எம்.பி.

வழக்கம்போலவே  52 வது துக்ளக் ஆண்டு விழாவும்  சர்ச்சைகளையும் சலசலப்புகளையும் ஏற்படுத்திவிட்டன . 52வது ஆண்டு துக்ளக் நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.   விழாவில் துவக்க உரையாற்றிய ஆடிட்டர் குருமூர்த்தி,   அரசாங்க வங்கிகளில் பணியாற்றுகிறார்கள் கழிசடைகள் என்றார்.   குருமூர்த்தி அப்படி பேசிய போது,  முகம் சுளித்தவாறு அப்படி இல்லை என்பது போல் தலையாட்டினார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.   ஆனாலும் பின்னர் அவர் பேசிய போது அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.  

ன்

 குருமூர்த்தி கழிசடைகள் என்று இழிவு படுத்தி பேசியதற்கும் அவர் அப்படி பேசியதை மேடையில் கண்டிக்காததற்கும் கண்டனம் வலுத்து வருகிறது.  விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் எம்பி ரவிக்குமார் கண்டனம்  தெரிவித்திருக்கிறார்

குருமூர்த்தியின் இந்த பேச்சுக்கு,  ‘’மாண்புமிகு இந்திய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  துக்ளக் விழாவில் பொதுத்துறை வங்கி ஊழியர்களின் சேவையைப் பாராட்டியதற்கு நன்றி. ஆனால் அவர்களை கழிசடைகள் என குருமூர்த்தி இழிவுபடுத்திப் பேசியதை அங்கே  கண்டித்திருக்க வேண்டாமா ?’’என்ற கேள்வியை எழுப்பி இருந்தார் விசிக எம்.பி.  ரவிக்குமார்.  மதுரை எம்.பி. சு.வேங்கடேசனும் குருமூர்த்தியின் ‘கழிசடை’ பேச்சை கண்டித்து,  இதை நிதி அமைச்சர் கண்டிக்க கூடாதா? என்று கேட்டிருந்தார்.

ன்

இந்நிலையில்  எம்.பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன்,  ’’இந்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் வங்கி அலுவலர்கள் மற்றும்  ஊழியர்களைக் கழிசடைகள் என துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி பேசியிருப்பதை வன்மையாக  கண்டிக்கிறோம்.  இதற்கு அவர் வெளிப்படையாக தனது வருத்தத்தைத் தெரிவிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்துகிறார். 

மேலும்,   பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றுகிறவர்களை கழிசடைகள் என இழிவாகப் பேசிய ‘துக்ளக்’ குருமூர்த்தியை இந்திய ஒன்றிய அரசு ரிசர்வ் வங்கியின் அலுவல் சாரா இயக்குநர் பதவியிலிருந்து  நீக்கவேண்டுமென நிதித்துறை அமைச்சரை கேட்டுக்கொண்டிருக்கிறார்.