"பசும்பொன்னுக்கு ஈபிஎஸ் வரக்கூடாது என சூழ்ச்சி நடந்துள்ளது" - ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

 
tn

பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிசாமி வரக்கூடாது என சூழ்ச்சி நடந்துள்ளது என்று ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டியுள்ளார்.

udhayakumar

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் , "வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது.  அரசின் மெத்தனப் போக்கினால் மழைநீர் வடிகால் பணிகள் தேக்க நிலையில் உள்ளது.  அத்துடன் மழை நீர் வடிகாலில் செய்தியாளர் ஒருவர்  விழுந்து இறந்துள்ளார். வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தமிழக அரசு முறையாக செய்ய வேண்டும். பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு செய்ய வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தாலே தமிழகத்தில் தீவிரவாதம் தலைதூக்குகிறது.  கோவையில் 1998ல் 11 இடங்களில் குண்டுவெடிப்பு நடந்தது. அதிமுக ஆட்சி காலங்களில் பயங்கரவாதம் கட்டுக்குள் இருந்தது. சோற்றில் பூசணிக்காயை மறைப்பது போல அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் ஒன்றும் நடக்கவில்லை என்று கூறி வருகிறார் .கோவை சம்பவம் குறித்து முதல்வர் மௌனம் கலைந்து பேச வேண்டும். தீவிரவாதம் பயங்கரவாதத்திற்கு எதிராக திமுக தலைமையிலான அரசு வேடிக்கை பார்த்தால் ஆட்சியில் இருந்து அவர்கள் தூக்கி எறியப்படுவர்" என்றார். 

udhayakumar

தொடர்ந்து பேசிய அவர்,  "திமுக இந்தி எதிர்ப்புக்கு எதிராக நடத்தும் போராட்டம் மடைமாற்றும் செயல். தமிழுக்கு ஆபத்து என்று திமுக பேசி வருகிறது.  தமிழை  அதிமுக மட்டும் பாதுகாத்து வருகிறது. தமிழுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதிமுக முதலில் நிற்கும். எடப்பாடி பழனிசாமி தென் தமிழகத்தில் உள்ள தேவர் சிலைகளுக்கு மரியாதை செய்துள்ளார்.  2017 தேவரின் தங்க கவசம் எடுப்பதற்கு எடப்பாடி பழனிசாமி மதிநுட்பத்தோடு செயல்பட்டார்.  தேவர் தங்க கவச விவகாரத்தில் ஈபிஎஸுக்கு எதிராக சூழ்ச்சிகள் செய்யப்பட்டது. பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிசாமி வரக்கூடாது என சூழ்ச்சி நடந்துள்ளது.  எதிர்வரும் காலங்களில் பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிசாமி வருவார்.  சலசலப்பு சச்சர்களுக்கு எடப்பாடியார் அஞ்ச மாட்டார் . ஓபிஎஸ்  பலம் என்ன பலவீனம் என்ன என்பது மக்களுக்கு தெரியும்.  தேனியில் ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது.  இதுவே ஓபிஎஸ் செல்வாக்கு.   50 ஆண்டுகளில் அதிமுக தோல்வியையும் வெற்றியையும் சந்தித்துள்ளது. அதுவும் நிரந்தரமில்லை. வீழ்வதும் வெல்வதும் தொண்டர்கள் மக்கள் கையில் உள்ளது .எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக புதிய வரலாறு படைக்கும்" என்றார்.