திருவண்ணாமலையில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் கிரிவலம்
சித்ரா பௌர்ணமி தினமான இன்று முழு பௌர்ணமி நிலவில் 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கிரிவலம் சென்றுள்ளனர்.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் 2,668 அடி உயரம் கொண்ட மலையே சிவனாக எண்ணி 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவது வழக்கம்.
கார்த்திகை தீபம் மற்றும் சித்ரா பௌர்ணமி போன்ற நாட்களில் 20 முதல் 25 லட்சம் பக்தர்கள் வரை திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவார்கள். கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சித்ரா பௌர்ணமிகளில் திருவண்ணாமலையில் கிரிவலம் வர தடை விதிக்கப்பட்டு இருந்தது.
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்தவுடன் கடந்த பங்குனி மாதம் பவுர்ணமி கிரிவலம் வர மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
இதனைத்தொடர்ந்து சித்ரா பௌர்ணமி இன்று அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கி பௌர்ணமி நாளை 17ஆம் தேதி அதிகாலை 1.17மணிக்கு பௌர்ணமி நிறைவடைய உள்ளது. இன்று அதிகாலை முதலே சென்னை, சேலம், திருச்சி, மதுரை, பெங்களூரு, ஆந்திரா போன்ற வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிய தொடங்கினர். அண்ணாமலையார் கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு அதிகாலை முதலே சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். திருவண்ணாமலை நகர் மற்றும் 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப்பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபட்டனர். 14 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு அந்த முகாம்களில் உயிர் காக்கும் மருந்துகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
சென்னை சேலம் திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 2800 சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்டது. கிட்டத்தட்ட 20 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்தனர்.


