ரூ.3.5 லட்சத்தை 10 ரூபாய் நாணயங்களாக கொடுத்து KTM பைக் வாங்கிய இளைஞர்!

 
ktm

ஈரோட்டில், 5 ஆண்டுகளாக சிறுக சிறுக சேமித்த  மூன்றரை லட்சம் ரூபாய் பணத்தை,  10 ரூபாய் நாணயங்களாக மாற்றி அதனை மூட்டையாக கொண்டு வந்து கொட்டிய கல்லூரி மாணவர் தனது கனவு பைக்கை ஆர்வமுடன் வாங்கி சென்றார்.

ktm

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த  காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. இவர் டையிங் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது இரண்டாவது மகன் சந்தோஷ்குமார், கோவையில் தனியார் கல்லூரி ஒன்றில் பட்ட மேற்படிப்பு பயின்று வருகிறார். இருசக்கர வாகன பிரியரான சந்தோஷ் குமார், தனக்கு பிடித்தமான பைக் வாங்குவதற்காக கடந்த 5 ஆண்டுகளாக சிறுக சிறுக 3.50 லட்சம் ரூபாய் சேமித்துள்ளார். 

சற்று வித்தியாசமான முறையில் பைக் வாங்க எண்ணிய அவர், 10 ரூபாய் நாணயங்களாக அதனை மாற்றினார். பின்னர் அவற்றை மூட்டைகளாக கட்டி சுமார் 700 கிலோ அளவிற்கான நாணயங்களை பைக் விற்பனை நிலையத்திற்கு எடுத்து வந்தார். மூட்டையாக எடுத்து வந்த நாணயங்களை கொட்டிய அவர் தனக்கு விருப்பமான பைக்.கை ஓட்டி சென்றார். இது பலரின் கவனத்தையும் ஈர்த்தது. ஈரோடு உள்ளிட்ட பல ஊர்களில்10 ரூபாய் நாணயங்களை வியாபாரிகளும் பொதுமக்களும் வாங்க மறுக்கின்றனர். அரசும் அதிகாரிகளும் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற தகவல் இவர்களிடம் பரவி கிடக்கிறது. இந்த எண்ணத்தை மாற்றவும், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 10 ரூபாய் நாணயங்களை எடுத்து வந்ததாக சந்தோஷ் குமார் தெரிவித்தார்.