சட்டவிரோத பண பரிமாற்றம்- செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை அனுப்பியிருந்த சம்மன் ரத்து

 
senthil balaji

சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக  அமலாக்கப்பிரிவு அனுப்பியிருந்த சம்மனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011 -15ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, அத்துறையில், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்  வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் 3  வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்குகள் எம்.பி - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. 

இதற்கிடையில், இந்த மோசடியில் சட்ட விரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கப் பிரிவும்  கடந்த 2021ம் ஆண்டு வழக்கு பதிவு செய்திருந்தது.இந்த வழக்கில் ஆஜராகுமாறு சம்மனும் அனுப்பப்பட்டிருந்த்து. இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும், வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என  செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், மற்றும் சண்முகம் என்பவர் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே சம்மனுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கின் இறுதி விசாரணை நீதிபதிகள் ராஜா, குமரேஷ்பாபு அமர்வின் முன்பு நடைபெற்றது.

Madras High Court in Chennai - Chennai Madras High Court, Places to Visit  in Chennai

அப்போது செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, இந்த வழக்கில் எந்த ஒரு ஆவணங்களும் இல்லாமல் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் வழக்கு தொடர்ந்த தேதிகளில் முரண்பாடு உள்ளதாகவும் வாதிட்டார். இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு தொடர்ந்துள்ள  மூன்று வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வழக்கை ரத்து செய்துள்ளதாகவும் இரண்டு வழக்குகள் விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். ஆதாரங்கள் இல்லாமல் தொடரப்பட்ட இந்த வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.. இந்த வாதங்களுக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இன்று,செந்தில் பாலாஜி உள்ளிட்ட மூன்று பேருக்கு  அமலாக்கப்பிரிவு அனுப்பிய சம்மனை ரத்து செய்து  உத்தரவிட்டுள்ளனர்.