திடீரென பச்சை நிறத்தில் மாறிய கடல்...மீனவர்கள் அச்சம் - தூத்துக்குடியில் பரபரப்பு

 
green sea

தூத்துக்குடியில் திடிரெனெ கடல் பச்சை நிறத்தில் மாறியதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். 

தூத்துக்குடி புதிய துறைமுகம் கடல் பகுதி திடிரெனெ பச்சை நிறத்தில் காட்சியளித்தது. இதனை தொடர்ந்து ஆமை ஒன்று உயிரிழந்து கரை ஒதுங்கியது. இதனால் அச்சமடைந்த மீனவர்கள், மீன்வளத்துறை அதிகாரிகள் இதுக்குறித்து விளக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், நுரையுடன் துர்நாற்றமும் வீசியது. கடலின் இந்த திடீர் மாற்றம் பற்றிய தகவல் அப்பகுதி முழுவதும் பரவியதால் மீனவர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. பொதுவாக கடலில் உள்ள பூங்கோரை பாசிகளால் கடல் நீர் பச்சை நிறமாக காட்சியளிக்கும் என்றும், இதனால் சிறிய வகை மீன்களின் செதில்கள் பாதிப்படைந்து உயிரிழக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே கடல் நீரின் திடீர் நிறமாற்றத்துக்கு பூங்கோரை பாசிகள் தான் காரணமா? அல்லது ரசாயன கழிவுகள் காரணமா? என மீன்வளத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடியில் கடல் நீர் திடீரென பச்சை நிறத்தில் மாறிய செய்தி அறிந்து பொதுமக்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.