யார் இந்த சபரீசன் என்று மக்கள் கோபத்தோடு கேட்கும் நிலைக்கு காரணம்?

 
sa

நீங்கள் முதல்வரின் மருமகன் சபரீசனா? வாருங்கள் என்று அன்போடு வரவேற்க வேண்டிய மக்கள், யார் இந்த சபரீசன் என்று கோபத்தோடு கேட்கும் நிலைக்கு  சபரீசனும், முதல்வர் ஸ்டாலினுமே காரணம் என்கிறார் நாராயணன் திருப்பதி .

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் முதல்வர் மு. க. ஸ்டாலின் மருமகன் சபரீசன்  நேற்று சிறப்பு யாகம் செய்துள்ளார்.  இதற்காக தடுப்பு அரண் அமைத்து யாகம் நடந்ததால் பொதுமக்கள் யாரும் வள்ளி குகைக்கு செல்ல முடியாமல் 3 மணி நேரம் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.  இதற்கு தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

s

கோவிலுக்கு சென்று வழிபடுவது,  இறைவனின் அருள் வேண்டி யாகம் செய்வது  என்பது ஒருவரின் உரிமை மற்றும் விருப்பம். அதிலும், ஹிந்து என்றால் திருடன் என்றும், ராமன் எந்த கல்லூரியில் படித்தான் என்றும், குங்குமம் உள்ள நெற்றியை பார்த்து நெற்றியில் என்ன ரத்தம் என்றும், கடவுள் இல்லை, இல்லை, இல்லவே இல்லை. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பினவன் அயோக்கியன், வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்றும் பேசிய குடும்பத்திலிருந்து, குழுமத்திலிருந்து ஒருவர் அதே இறைவனை வேண்டி தஞ்சம் புகுந்துள்ளார் எனும் போது நாத்திகம் தோற்கடிக்கப்பட்டு, தர்மம் வெற்றி பெறுகிறது என்பதையே உணர்த்துகிறது என்கிறார் நாராயணன்.

sa

அவர் மேலும்,  சொந்த குடும்பத்திலேயே தங்கள் கொள்கையை உறுதி செய்ய முடியாதவர்கள் இனி அந்த கொள்கை குறித்து பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும்.  ஆனால், திருச்செந்தூர் கோவிலில் சபரீசன்  வருகையை முன்னிட்டு அதிகார துஷ்பிரயோகம் செய்து ஆயிரக்கணக்கான பொது மக்களை மூன்றரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வைத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. யாகம் நடத்த வேண்டுமானாலும் பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் நடத்தியிருக்க வேண்டும். இறைவன் முன்பும், சட்டத்தின் முன்பும் அனைவரும் சமமே. கோவிலின் விதிகளை மீறி, நடைமுறைகளை மீறி ஒரு தனிமனிதனுக்காக அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என்கிறார். 

ஒரு பக்கம் நாத்திக வேடம் தரித்து, மற்றொரு பக்கம் ஆத்திக வேடம் போடுவதை மக்கள் எள்ளி நகையாடி கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லும் நாராயணன், நீங்கள் முதல்வரின் மருமகன் சபரீசனா? வாருங்கள் என்று அன்போடு வரவேற்க வேண்டிய மக்கள், யார் இந்த சபரீசன் என்று கோபத்தோடு கேட்கும் நிலைக்கு காரணம் சபரீசனும், முதல்வர் ஸ்டாலினுமே. யாகம் செய்து தான் இறைவன் அருளை பெற வேண்டும் என்பதில்லை. மக்களை மதித்து அவர்களோடு ஒருவராய் இணைந்திருந்து இறைவனை வேண்டி கொள்ளுங்கள். எல்லாம் வல்ல இறைவன் உங்களை காத்தருள்வான். இறைவனிடம் சரணடைந்தவர்களை இறைவன் என்றும் கைவிட மாட்டான் என்கிறார்.