9 காளைகளை அடக்கி 3ம் இடத்திலிருந்த வீரர் மாடு முட்டி காயம்..

 
9 காளைகளை அடக்கி 3ம் இடத்திலிருந்த வீரர் மாடு முட்டி காயம்..


விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பாலமேடு ஜல்லிக்கட்டில், 9 காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரர் மாடு குத்தியதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் பாலமேட்டில் காலை தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி , விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  1000 காளைகள்,  335 மாடு பிடிவீரர்கள் களம் பங்கேற்றுள்ளனர்.   இதில் வெற்றி பெறும் காளைகள் மற்றும்  மாடுபிடி வீரர்களுக்கு கார்,  மொபட்,  பீரோ , கட்டில், சைக்கிள், அண்டா, நாற்காலிகள், மிக்ஸி, கிரைண்டர்  உள்ளிட்ட  பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன.   அத்துடன் சிறந்த வீரர்கள் மற்றும் காளைகளுக்கு  அமைச்சர் மூர்த்தி சார்பில் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டு வருகிறது.  இறுதியாக அதிக காளைகளை அடக்கி முதலிடம் பிடிக்கும் வீரருக்கு தமிழக அரசு சார்பில் நிசான்  சொகுசு கார் பரிசாக வழங்கப்பட உள்ளது.

Jallikattu

ஒருபுறம் ஜல்லிக்கட்டு களைகட்டினாலும் பலர் காயமடைந்து வருகின்றனர்.  இதுவரை 4 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், 16 காளைகளை பிடித்து மணி  முதலிடத்திலும், 11 களைகளை அடக்கி ராஜா 2 வது இடத்திலும்,  அரவிந்த், வாஞ்சிநாதன் ஆகிய இருவரும் தலா 9 காளைகளை அடக்கி 3வது இடத்திலும் உள்ளனர். 4 மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர் ஒருவர், காவல் ஆய்வாளர் ஒருவர் என மொத்தம் 19 பேர் காயமடைந்துள்ளனர்.  இதில் 5 பேர் மேல் சிகிச்சைகாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 9 காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரராக விளங்கிய  அரவிந்த மாடு முட்டியதில் பலத்த காயமடைந்தார்.  3வது இடத்தில் இருந்த அரவிந்த்ராஜ் வயிற்றில் மாடு குத்தியதில், குடல் சரிந்து பலத்த காயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.