வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுபகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது ..

 
வானிலை

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  

நேற்று முன்தினம்  தென்கிழக்கு வங்கக்கடல்  மற்றும் அதனை ஒட்டியுள்ள  பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று  காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்று அதே பகுதிகளில் நிலவி வந்தது.  பின்னர்  இது மேற்கு - வடமேற்கு  திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  வலுப்பெற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.  இது மேலும் அடுத்த 48 மணி நேரத்தில்  ( இரண்டு தினங்களில்)  மேற்கு - வடமேற்கு  திசையில் தமிழக மற்றும் புதுச்சேரி  மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்  என வானிலை மையம் கூறியுள்ளது.

வங்கக்கடலில்  காற்றழுத்த தாழ்வுபகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழக மாவட்டங்களில் இன்று மாலைக்கு பிறகு மழை தொடங்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், நாளை, நாளை மறுநாள் ஆகிய நாட்களில் வட தமிழக மாவட்டம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், நாளை (  21.11.2022 ) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,  விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நாளை மறுநாள் ( 22.11.2022)  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்,   திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.