"அதிமுகவை அழிக்க பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின்" - எடப்பாடி பழனிசாமி பேச்சு!!

 
ep

மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.  அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் முதல் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் இதுவாகும்.  ஒருங்கிணைந்த சென்னையில் 9 மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில் இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பங்கேற்றுள்ளனர்.  மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு ,குடிநீர், கழிவு நீர் இணைப்பு கட்டணங்கள் உயர்வு,  விலைவாசி உயர்வு , சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்னிறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

tn

இப்போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி,  "மக்கள் விரோத ஆட்சியை கண்டித்து நடைபெற்று வரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அலைகடலென ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.  எல்லா வரியையும் உயர்த்திய  ஒரே அரசு திமுக தான்.  14 மாதம் திமுக ஆட்சியில் விலைவாசி,சொத்து வரி,மின்கட்டணம் என எல்லாவற்றிலும் வரி உயர்ந்துள்ளது. அதிமுக ஆர்ப்பாட்டத்தை பார்த்து திமுக நடுங்கி கொண்டிருக்கிறது.  வெளிப்பாடாகவே தொடர்ந்து முன்னாள்  அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போட்டு வருகின்றனர்.  சுமார் 15 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அளித்தார். தொடர்ந்து பொய் வழக்கை திமுக போட்டது. அது அனைத்தையும் தவிடு பொடி ஆக்கினார்.

tn

உங்கள் ஆட்சி அதிகாரம் எதிர்க்கட்சியை அழிப்பதற்கு அல்ல.  மக்களுக்கு நன்மை செய்வதற்காக தான் . அதிமுகவை அழிக்க பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதிமுகவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.  காற்றுக்கு தடை போட முடியாது, அதுபோல அதிமுகவின் வளர்ச்சிக்கு ஒரு போதும் தடை போட முடியாது. எங்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுங்கள் என பிரதான எதிர்க்கட்சியான எங்களிடம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த சொன்ன கடிதம் எங்கே என்று கேட்டோம். இதுவரை பதில் இல்லை; மின் கட்டண உயர்வை திமுக அரசு திரும்பப் பெற வேண்டும்" என்றார்.