மதுவிருந்து அழைத்து ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்த கும்பல்!

 
murder

பொன்னேரி அருகே ஆட்டோ ஓட்டுநர் நண்பர்களால் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

image

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழைய நாப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (28). தனியார் நிறுவனங்களில் ஓட்டுநராக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் கடந்த 6 மாதங்களுக்கு முன் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஒட்டி வந்துள்ளார். இவருக்கு கீர்த்தனா என்ற மனைவியும், கவின் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தையும் உள்ளனர். நேற்று மாலை ரவிச்சந்திரன் வீட்டில் இருந்தபோது அவரது நண்பர் ஒருவர் போன் செய்து மது விருந்துக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. 

நப்பாளையம் பகுதியில் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள முட்புதரில் நண்பர்களுடன் ரவிச்சந்திரன் மது அருந்த சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அந்த வழியே சென்றவர்கள் அங்கு முகம் சிதைந்த நிலையில் ரத்தவெள்ளத்தில் ஒருவர் சடலமாக இருப்பதை கண்டு மணலி புதுநகர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தடயங்களை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டனர். கொலை செய்யப்பட்ட நபர் ஆட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரன் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் நண்பர்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லை போட்டும், கத்தியால் குத்தியும் ரவிச்சந்திரனை கொடூரமாக கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து ரவிச்சந்திரனை கொலை செய்ததாக அவரது நண்பர்கள் மதன்குமார், ஜெயப்ரகாஷ், தனுஷ், பரத் ஆகிய 4 பேரை மணலி புதுநகர் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து கொலை செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் ரவிச்சந்திரனின் மனைவி கீர்த்தனா கூறுகையில், வீட்டில் இருந்த தமது கணவருக்கு அழைப்பு வந்ததாகவும், ஜெயிலில் இருந்து வெளியே வந்தவர்கள் மது விருந்து வைப்பதாக அவர் தம்மிடம் கூறி சென்ற நிலையில் கொலை செய்யப்பட்டதாக தகவல் வந்ததாக கண்ணீர் மல்க தெரிவித்தார். 

கடந்த சில மாதங்களுக்கு முன் தம்மை கொலை செய்ய தமது நண்பர்கள் முயற்சித்ததாகவும் திட்டமிட்டதாகவும் அவர்களிடம் இருந்து தப்பித்ததாகவும் கணவர் தெரிவித்ததாக மனைவி கூறினார்.