நெல் கொள்முதல் ஈரப்பத அளவு 19 % உயர்த்தியது மத்திய அரசு..

 
நெல் கொள்முதல் ஈரப்பத அளவு 19 % உயர்த்தியது மத்திய அரசு..

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 22 சதவிகிதமாக உயர்த்த  வேண்டும் என  மத்திய  அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்த நிலையில்,  19% சதவிகிதம் ஈரப்பதம் உள்ள நெல் மணிகளை கொள்முதல் செய்ய அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது  விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் ஈரப்பதத்தின் அளவு 17 % ஆக உள்ளது. இதனை உயர்த்தக்கோரியும்,  22 சதவிகிதம் ஈரப்பதம் கொண்ட  நெல் கொள்முதல் செய்ய அனுமதி கோரியும்  மத்திய உணவுத்துறை செயலாளருக்கு தமிழக கூட்டுறவுத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன்  கடிதம் எழுதியிருந்தார்.  இதனையடுத்து  22 சதவீதம் ஈரப்பத நெல் கொள்முதல் தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்கு  மத்திய  அரசின் குழு கடந்த 15ஆம் தேதி அன்று தமிழகத்திற்கு வருகை புரிந்தது.  தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இந்தக் குழு ஆய்வு மேற்கொண்டது.

‘நெல் கொள்முதல் மையங்களில் திடீர் ஆய்வு செய்க’ – நீதிமன்றம் உத்தரவு

இந்தநிலையில் தற்போது  விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 17 சதவிகிதத்திலிருந்து 19 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது.   22 சதவீதமாக உயர்த்த  தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில்,  2% மட்டும்  உயர்த்தி மத்திய  அரசு அனுமதி அளித்துள்ளது.  இது விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  மேலும், நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 22% ஆக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.