ஆடம்பர வாழ்க்கை வாழ காதலியுடன் வழிப்பறியில் ஈடுபட்ட காதலன்

 
boy

கோவையில் ஆடம்பர வாழ்க்கைக்கும் ஆன்லைன் விளையாட்டில் இழந்த கடனை அடைக்கவும் காதலியுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட காதலனை போலீசார் தேடிவருகின்றனர். 

கோயமுத்தூர் புற தொண்டாமுத்தூரை  சேர்ந்தவர் காளியம்மாள் ஏப்ரல் மாதம் 28ம்  தேதி நரசிபுரம் சாலையில் உள்ள தீயணைப்பு நிலையம் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஆணும்,பெண்ணும்  மூதாட்டியிடம்  முகவரி கேட்பது போல் நடித்து திடீரென மூதாட்டி அணிந்திருந்த ஐந்தரை சவரன் தங்க நகையை பறித்துவிட்டு இருசக்க வாகனத்தில் தப்பியோடினர். 

இந்த நிலையில் காளியம்மன் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் தந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் இளம்பெண்ணும்  இளைஞர் ஒருவரும் அந்த வழியாக வேகமாக செல்வது தெரியவந்தது. இதனையடுத்து அந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அதில் வந்த இருவர்தான்  நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதை  உறுதி செய்திருக்கின்றனர். 

இதனையடுத்து கோவை சோமையம்பாளையத்தை சார்ந்த பிரசாத் (20 வயது) மற்றும் சுங்கம் பகுதியை சேர்ந்த இளம் பெண் தேஜஸ்வினி (20) ஆகியோரை பிடித்து  விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரும் பேரூர்  ச்சாபாளையம் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் பிடெக்  மூன்றாம் ஆண்டு படித்து வருவதும் காதலர்களான இவர்கள் ஆடம்பர செலவிற்காகவும், பிரசாத்திக்கு ஏற்பட்ட கடனை அடைக்கவும்  நகை பறிப்பு  சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து மாணவர்கள் இருவரையும்  கைது செய்த போலீசார் பறித்துசென்ற நகையை கைப்பற்றி இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கைதான காதலர்கள் இருவருமே தொழிலதிபர்களின் வாரிசுகள். பிரசாத் அவரது வீட்டிலேயே கைவரிசையை காட்டியிருக்கின்றார். சில மாதங்களுக்கு முன்னர் பிரசாத் தனது வீட்டில் இருந்த 30 சவரன் நகையை திருடி இருப்பதும், நகைகள் திருடு போனது தொடர்பாக காவல் துறை விசாரித்த போது தங்களது மகன் பிரசாத்தான் திருடன் என தெரிந்ததால் அவரது பெற்றோர்  புகாரை திரும்பப் பெற்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆன்லைன் மூலம் பந்தயத்தில்  ஏராளமான பணத்தை பிரசாத் இழந்ததால் நகை பறிப்பில் ஈடுபட்ட முடிவு செய்துள்ளார். இதற்கு உடந்தையாக காதலியும் இருந்ததுதான் கொடுமையிலும் கொடுமை