"சிறுவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதே சிற்பி திட்டத்தின் நோக்கம்" : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 
tn

சிறுவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதே சிற்பி திட்டத்தின் நோக்கம்  என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

tn

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் "சிற்பி" திட்டம் – தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்  தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், காவல்துறையை - மக்களின் நண்பன் என்று சொல்கிறோம்! அதற்கேற்ப, மக்கள் அனைவரும் காவல்துறையின் நண்பர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். என்னுடைய எண்ணம் மட்டுமல்ல, எல்லோருடைய எண்ணமும் அப்படித்தான் இருக்கும். காவல்துறையும் - மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குற்றங்கள் குறையும் என்பதைவிட, குற்றமே நிகழாமலும் தடுக்கப்படும் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த வகையில் மக்களையும் காவல்துறையையும் ஒன்றிணைக்கும் எத்தனையோ திட்டங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது. அப்படி நடைமுறையில் இருக்கக்கூடிய திட்டங்களைப் போல இது ஒரு முக்கியமான திட்டமாக சிற்பி என்ற புதிய முன்னெடுப்பை தமிழ்நாடு காவல்துறை இன்றைக்கு உருவாக்கியிருக்கிறது. இதனுடைய பொருள் Students in Responsible Police Initiatives (SIRPI). ஆக, சிற்பி என்ற இந்தத் திட்டத்திற்கு பெயரைச் சூட்டி அதற்காக ஒரு நிகழ்ச்சியை நடத்தி, மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்தோடு இதை ஏற்பாடு செய்திருக்கக்கூடிய காவல் துறையைச் சார்ந்த அதிகாரிகளுக்கு நான் முதலில் என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுதல்களை நன்றியை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

tn

சிற்பி - என்கிற இந்தத் திட்டம், பொறுப்புமிக்க மாணவர்களை உருவாக்கும் திட்டம்! இந்தத் திட்டத்தை,கடந்த 13.09.2021 அன்று தமிழக சட்டப்பேரவையில் நான் அறிவித்தேன்.சிறார் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு காவல்துறை சிறப்புக் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது. சிரத்தை எடுத்து செதுக்கியாக வேண்டும். இதுகுறித்து காவல்துறையின் உயரதிகாரிகளிடம் நான் சில தகவல்களைக் கேட்டேன். இந்தத் திட்டத்தை எப்படி செயல்படுத்தப் போகிறீர்கள் என்று கேட்டேன்.இந்தச் செயல் திட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 100 பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலக்கூடிய 2,764 மாணவர்களும், 2,236 மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பள்ளிகளில் ஒவ்வொரு புதன்கிழமையும் மாணவ, மாணவியர்கள் அப்பள்ளியில் உள்ள இரு ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் முன்னிலையில் கூடுவார்கள்.மாணவ, மாணவியர்களுக்கான வகுப்புகளைக் காவல்துறை அதிகாரிகளும் துறைசார் நிபுணத்துவம் பெற்றவர்களும் நடத்துவார்கள். இதுதொடர்பாக மாணவ, மாணவியர்களுக்குப் புத்தகம் ஒன்று வழங்கப்படும். இந்த வகுப்புகள் நடைபெறும் தருணங்களில் மாணவ, மாணவியர்களுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவுகள் வழங்கப்படும். மேலும், இம்மாணவ, மாணவியர்கள் நிர்ணயிக்கப்பட்ட 8 இடங்களுக்குச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று காவல்துறை அதிகாரிகள் என்னிடத்தில் சொன்னார்கள். இங்கே நீங்கள் படக்காட்சியாக தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். அதைக் கேட்டபோது எனக்கு மனநிறைவு அளிப்பதாக இருந்தது என்றார்.