போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் - ஓபிஎஸ்

 
ops

போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைந்து நிறைவேற்றிட நடவடிக்கை எடுத்திட  வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 2019 ஆம் ஆண்டிலேயே ஏற்படுத்தப்பட்டு இருக்க வேண்டிய சூழ்நிலையில், கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாமதப்படுத்தப்பட்டு, அடுத்த ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தை துவங்க வேண்டிய நிலையில், அதற்கு முந்தைய ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தமே ஏற்படாதது மிகுந்த வேதனை அளிக்கும் செயலாகும்.போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறிவிட்டு, ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதியர்களுக்கான பணப் பலன்கள், அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றை கூட நிறைவேற்றாதது தொழிலாளர்களை ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

BUS

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் தாமதப்படுத்தப்படுவதாக தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது குற்றம் சாட்டியது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்றப் பேரவைப் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒன்பது போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டுமென்றும், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அவர்களுடைய நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இன்று தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று 15 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், போக்குவரத்துத் தொழிலாளர்களுடைய எந்தக் கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம், ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான அகவிலைப் படி உயர்வு, ஓய்வு காலப் பயன்கள், மருத்துவக் காப்பீடு போன்ற நியாயமான கோரிக்கைகள் குறித்து பலமுறை பேச்சு வார்த்தை நடத்தப்பட்டும் ஒரு முடிவு காணப்படவில்லை.

op

இந்த நிலையில், போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்த உடன், தொழிற்சங்கத்தினருடன் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். கிட்டத்தட்ட ஏழு மணி நேரப் பேச்சு வார்த்தைக்குப் பின் பேட்டி அளித்த மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள், தொழிற்சங்கங்கள் வைக்கின்ற கோரிக்கைகளால் கூடுதல் நிதி சுமை ஏற்படும் என்று தெரிவித்து, நிதித் துறையுடன் கலந்து பேசிய பின் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்து இருக்கிறார். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை தேதியை கூட "குறிப்பிடாதது தொழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பேச்சு வார்த்தையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதன் மூலம் தொழிலாளர்களிடைய மன உளைச்சலை ஏற்படுத்தி, அவர்களை தங்கள் வழிக்குக் கொண்டு வரலாம் என்று அரசு நினைக்கிறதோ என்ற எண்ணம் தொழிலாளர்கள் மத்தியில் நிலவுகிறது.

govt

இந்தச் சூழ்நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு பொதுவான நிலையாணை (Common Standing Order) ஏற்படுத்திட, நிர்வாக மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து அரசு ஆணை வெளியிட்டுள்ளதையும், அதில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை இடம்பெறாததையும் பார்க்கும் போது, ஊதிய ஒப்பந்தத்தை மேலும் தாமதப்படுத்தி, அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ள தொழிற்சங்கங்களோடு ஓர் உடன்படிக்கை செய்து கொள்ள அரசு நினைக்கிறதோ என்ற ஐயமும் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தக் குழுவைக் காரணம் காட்டி ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை தாமதப்படுத்துவது என்பதும், மேற்படி குழுவில் அண்ணா தொழிற்சங்கப் பேரவையை இடம் பெறச் செய்யாதது என்பதும் கண்டிக்கத்தக்கது. அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில், அனைத்துத் தொழிற்சங்கங்களையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அழைத்துப் பேசி உடனடி தீர்வு காணவும், நிலையாணை தொடர்பான குழுவில் அண்ணா தொழிற்சங்கப் பேரவை இடம் பெறுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.