மனம் திருந்திய மாவோயிஸ்ட்டுக்கு மறுவாழ்வு அளித்த தமிழக அரசு

 
மாவோயிஸ்டுகள்

கர்நாடக மாநிலம், சிமோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபா என்கிற சந்தியா. 45 வயதான இந்தப் பெண், மாவோயிஸ்ட் அமைப்பின் மாநிலக்குழு உறுப்பினர். இவர், கர்நாடக மாநிலம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில், மாவோயிஸ்ட் அமைப்புக்காகப் பல ஆண்டுகளாகத் தீவிரமாக பணியாற்றியிருக்கிறார். மாது, நேத்ரா, விண்டு என பல பெயர்களிலும் வலம்வந்திருக்கிறார்.

2006-ம் ஆண்டிலிருந்து தலைமறைவாக இருந்துவந்த பிரபா மீது கர்நாடகாவில் மட்டும் 44 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. பிரபாவின் தலைக்கு அந்த மாநில அரசு 5 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்திருந்தது.  மாவோயிஸ்ட் இயக்கத்தில் முக்கியப் பொறுப்பிலிருந்த பிரபாவின் கணவர் பி.ஜி.கிருஷ்ணமூர்த்தி மீதும் 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. அவரை, கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி, கேரள போலீஸார் கைதுசெய்து சிறையிலடைத்தனர். 

இந்த நிலையில், பிரபா மாவோயிஸ்ட் அமைப்பிலிருந்து முழுமையாக வெளியேறி, பொதுச் சமுதாயத்துடன் இணைந்து அமைதியான முறையில் வாழ விரும்புவதாக திருப்பத்தூர் மாவட்ட க்யூ பிரிவு போலீஸாரிடம் தெரிவித்தார். இவ்வாறு தீவிரவாத நடவடிக்கைகளை கைவிட்டு இயல்பு வாழ்க்கை வாழ முற்படும் மாவோயிஸ்ட் இயக்கத்தினரை புனரமைத்து அவர்களுக்கு வேண்டிய வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் தற்போழுது தமிழக அரசு சரணடைதல் மற்றும் புனரமைப்புக் கொள்கையை வடிவமைத்து செயல்படுத்தி வருகிறது. 

அதன்படி சரணடையும் மாவோயிஸ்ட்களுக்கு ரூ. 1.5 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை மறுவாழ்வு நிதி வழங்கவும் மாத உதவித் தொகையாக மூன்று ஆண்டுகளுக்கு ரூ.4000/- வழங்கவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்து செயல்படுத்தி வருகிறது. அதன் படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18-ம் தேதி  காவல்துறையிடம் சரணடைந்த மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த திருமதி.பிரபா என்கிற சந்தியா, மனம் திருந்தியதால் அவர் கடந்த ஓராண்டாக வேலூர் மாவட்டம் அரியூரில் உள்ள ஸ்ரீ சாய் தஞ்சம் முதியோர் இல்லத்தில் காவல்துறையினரின் கண்காணிப்பில் தொடர்ந்து பக்கவாதத்திற்கு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் இந்த முதியோர் இல்லம் அருகே மாவோயிஸ்ட் பிரபாவின் மறுவாழ்விற்காக  தமிழக அரசு ஆவின் பாலகம்  அமைத்து கொடுத்துள்ளது. இதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் இன்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அப்பொழுது பேசிய அவர்,  கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம்  திருப்பத்தூர் மாவட்ட  காவல்துறையிடம் சரணடைந்த மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த பிரபாவுக்கு, தமிழக அரசின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் நிரந்தர வைப்பு நிதியாக வழங்கப்பட்டுள்ளது ஆவின் பாலகம் அமைத்து தரப்பட்டுள்ளது.எனவே இதுபோன்று  சமூக விரோத செயல்கள் மற்றும் அரசுக்கு விரோதமாக ஈடுபட்ட நபர்கள் மனம் திருந்தி வருபவர்களுக்கு , அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசின் அனைத்து நல திட்ட உதவிகளையும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.