மக்களை எந்த அளவிற்கு துன்புறுத்த முடியுமோ, அந்த அளவிற்கு செயல்படுகிறது திமுக அரசு.. - டிடிவி தினகரன் காட்டம்..

 
ttv


மக்களை எந்த அளவிற்கு துன்புறுத்த முடியுமோ அந்தளவிற்கு அடுத்தடுத்து தி.மு.க அரசு செயல்படுகிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 10-ம் தேதி முதல் புதிய மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இந்த மின்கட்டண உயர்வே பொதுமக்களுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது  மின் இணைப்பு பெறுதல் மற்றும் சேவை கட்டணங்களும் உயர்த்தப்பட்டிருக்கிறது.  அதாவது புதிய இணைப்புக் கட்டணம், மீட்டர் காப்பீடு கட்டணம், வளர்ச்சி கட்டணம், பதிவு கட்டணம் ஆகியவையும் அதிகரித்திருக்கிறது.  மின்கம்பங்கள் மூலமாகவோ, தரைக்கு அடியில் கேபிள் மூலமாகவோ அந்தந்த  பகுதிகளுக்கு ஏற்ப இந்த கட்டணங்கள் இருமடங்காக உயர்ந்திருக்கிறது.  

eb bill

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன், “மின்கட்டணத்தைக் கடுமையாக உயர்த்திய தி.மு.க அரசு, எந்தவித அறிவிப்பும் இன்றி புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணத்தையும் இஷ்டம்போல் உயர்த்தியிருப்பதாக செய்திகள் வருகின்றன.  தமிழ்நாட்டு மக்களை எந்த அளவிற்கு துன்புறுத்த முடியுமோ அந்தளவிற்கு அடுத்தடுத்து தி.மு.க அரசு செயல்பட்டு வருவதற்கு இது இன்னொரு சான்று.  மக்களை நேரடியாக பாதிக்கும் இந்த கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது.
இதுதான் திரு.ஸ்டாலின் அடிக்கடி கூறும் 'சொல்லாததையும் செய்வதோ?!” என்று விமர்சித்துள்ளார்.