மழை பாதித்த இடங்களை நேரில் பார்வையிட்ட முதல்வர்..

 
ரங்கசாமி

புதுச்சேரியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி நேரில் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான  காற்றழுத்த தாழ்வு பகுதியால்,  கடலோர இருக்கும்  மாவட்டங்களிலும், புதுவை, காரைக்காலிலும் பலத்த மழை பெய்தது.  புதுவையில் கடந்த 10-ந்தேதி தொடங்கிய மழை நேற்று வரை கொட்டித்தீர்க்கவே  நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியது. ரெயின்போநகர், பாவாணர் நகர், கிருஷ்ணாநகர், லம்போர்ட் சரவணன் நகர், புஸ்சி வீதி, பட்டேல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

புதுச்சேரி மழை

தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றும் பணியில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை ஊழியர்கள் தீவிரம் காட்டினர். அதன்படி ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதேபோல் மழையால் சேதமடைந்த சாலைகளில் ஜல்லி, மற்றும் மண்கொட்டி சீர்செய்யும் பணியும் நடந்தது. மழை இல்லாததால் புதுவை வந்த சுற்றுலா பயணிகளும்  மகிழ்ச்சியுடன் நகரை வலம் வந்தனர். காவல் துறையின் எச்சரிக்கையை மீறி கடலில் குளித்தவர்களை அப்புறப்படுத்தினர். மழையால் முக்கிய சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.

ரங்கசாமி

 தொடர்ந்து மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புதுவையின் நெற்களஞ்சியமான பாகூர் மற்றும் திருக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.   இந்த நிலையில் இன்று   முதலமைச்சர் ரங்கசாமி மழை பாதித்த இடங்களை பார்வையிட்டார். வில்லியனூர், அரியூர் திருவண்டார் கோயில், மதகடிப்பட்டு, கே.டி குப்பம், குச்சிபாளையம், பி. எஸ். பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் பார்வையிட்ட அவர் மழை சேதங்கள் குறித்து விவசாயிகளிடம் விசாரித்தார்.