தம்பி அண்ணாமலை இப்படி பேசியிருக்க கூடாது.. இது அநாகரீகமான செயல் - சீமான் கருத்து...

 
seeman

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறித்து அண்ணாமலை சொன்ன கருத்துகள் அநாகரிகமானது என்றும்,  தம்பி அண்ணாமலை  போன்ற ஒரு படித்த அதிகாரி இப்படி பேசக்கூடாது என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை  ஒருங்கிணைப்பாளர் சீமான்  தெரிவித்துள்ளார்.  

புலித்தேவன் வீரவணக்க நிகழ்வு,   தமிழ் தேசிய போராளி தமிழரசன் மற்றும் அனிதா நினைவு போற்றும் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.  அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் வழக்கு  சிபிசிஐடி விசாரணையில் இருக்கும் போது நீதிமன்றம் அவசர அவசரமாக தீர்ப்பு கொடுப்பது அவசியமற்றது.   நீதிபதிகள்   கள ஆய்வு விசாரணையில்  இருக்கும்போது இதுபோன்று தீர்ப்பு வழங்குவது தவறானது.   இதன் பின்பு கள ஆய்வு விசாரணை,   சிபிசிஐடி விசாரணையின் முடிவு   என்னவாக இருக்கும்.  முதலில் தீர்ப்பை அறிவித்துவிட்டு அதற்கு ஏற்ப விசாரணை நடத்துவது ஏற்புடையது அல்ல என்றார்.  இது மிகப்பெரிய,  மிக மோசமான முன்னுதாரணம்.   பொதுமக்களுக்கு கடைசி நம்பிக்கையாக இருப்பதே நீதிமன்றம் தான்,  அங்கும் இதுபோன்று நடப்பது நீதிக்காக போராடுபவர்களுக்கு மிகப்பெரிய மனச்சோர்வை அளிக்கும்.

annamalai

எட்டு வழி சாலை திட்டத்தை ஆதரிக்கவும் இல்லை,  எதிர்க்கவும் இல்லை என்று கூறும் அமைச்சர் ஏ.வ.வேலு தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது பேசியவற்றை முழுமையாக கேட்டு விட்டு, பின்னர் பேச வேண்டும் என்று தெரிவித்தார்.  மேலும்,  பாஜகவுக்கு எதிரான  நாடு தழுவையே எதிர்க்கட்சிகளின் கூட்டணி தற்போதைய சூழலில்  மிக தேவை என்று நினைக்கிறேன்.  

சந்திரசேகர ராவ் அவர்களின் உறுதியான நிலைப்பாட்டை தனிப்பட்ட முறையில் நான் மதிக்கிறேன். அவரைப் பாராட்டுகிறேன்.   அதே  நிலைப்பாட்டில் இருக்கும் நிதீஷ்குமார் அவர்கள்,   பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் காரர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அனுபவித்து  வெளியே வந்திருக்கிறார்.  இந்தியாவில் ஓராண்டுக்கு முன்னதாக  2023 ஆம் ஆண்டே மக்களவை  தேர்தலை சந்திக்கவும் வாய்ப்பு இருக்கிறது.  ஆகையால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  மம்தா பானர்ஜி,  நிதிஷ்குமார், சந்திரசேகர ராவ் ஆகியோர் இணைந்து ஒரு வலுவான அணியை உருவாக்கினால்   பாஜகவின் பெரும்பான்மை வெற்றியை தடுக்கலாம்.

பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாட்டில் வரி வருவாய் அதிகரித்திருப்பதாக நிதியமைச்சர் கூறுகிறாரே என்கிற கேள்விக்கு,  பொதுமக்களிடம் வரியை அதிகரித்துவிட்டு,  தமிழ்நாட்டில் வரி வருவாய் பெருகி விட்டதாக  கூறுவதற்கு வெளிநாட்டில் போய் படித்திருக்க தேவை இல்லை என்று விமர்சித்தார்.  நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறித்து அண்ணாமலை சொன்ன கருத்துக்கள் அநாகரீகமானது.  பிடிஆர் - ல் இந்த மாநிலத்திற்கு கேடு என்று அவர் சொல்வார் எனில், அண்ணாமலை, பாஜக,   ஆர் எஸ் எஸ் போன்றவற்றால் ஒட்டுமொத்த நாட்டிற்கே பெரும் கேடு.   தம்பி அண்ணாமலை போன்ற ஒரு படித்த அதிகாரி இப்படி பேசக்கூடாது . அண்ணாமலையையும் விட பிடிஆர் மிகச் சிறந்த கல்வியாளர்.  ஒரு பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்து வந்த அவரை இதுபோன்று வார்த்தைகளால்  விமர்சிக்க கூடாது.   கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும். இதுபோன்ற வார்த்தைகளை உபயோகிப்பது மிக தவறு என்றார்.