கருத்து சுதந்திரம் இளையராஜாவுக்கு கிடையாதா ? - தமிழிசை கேள்வி

 
tamilisai tamilisai

கருத்து சுதந்திரம் சிலருக்கு மட்டும் தானா? தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு சுதந்திரம் கிடையாதா என தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 

அம்பேத்கரும் மோடியும் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ள இளையராஜா, மோடி ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு நிச்சயம் அம்பேத்கரே பெருமைப்படுவார்.  அம்பேத்கருக்கும் மோடிக்கும் நிறைய விஷயங்களில் ஒற்றுமை இருக்கின்றன.   இருவருமே ஏழ்மையையும் ஒடுக்குமுறையையும் அனுபவித்தவர்கள்.  அதை ஒழிக்க பாடுபட்டவர்கள்.  இருவருமே இந்தியாவின் மீது பெரிய கனவுகளை கண்டதுடன் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் .  இப்படி இருவரும் ஒன்று படுவதை இந்த புத்தகம் எடுத்துக் காட்டுகிறது.   இதனை இளைய தலைமுறையினருக்கு நான் பரிந்துரைக்கிறேன் என்று அந்த நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார் இளையராஜா. இளையராஜாவின் இந்த கருத்துக்கு திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சமூக வலைதளங்களிலும் அவருக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.. 

ilayaraja songs copyrights

இந்நிலையில், இளையராஜாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழிசை சௌந்தரராஜன் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இணையற்ற இசைஞானி இளையராஜா பார்புகழும் பாரதப் பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா? கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா? தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்கச் சொல்வோம். விழித்துக்கொள் தமிழகமே ! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.