எப்ப சார் கடைய திறப்பீங்க? கை நடுங்குது! 3 மணி வரை திறக்காத டாஸ்மாக்- மது பிரியர்கள் அவதி

 
டாஸ்மாக்

செய்யாறு அருகே மதியம் மூன்று மணி வரை டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்படாததால் கடையை மது பிரியர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வாழ்குடை கிராமத்தில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று வழக்கம் போல் மது பிரியர்கள் 50க்கும் மேற்பட்டோர் மது பாட்டில் வாங்க மதியம் 12 மணியிலிருந்து கடையின் முன்பு காத்திருந்தனர். ஆனால் மதியம் மூன்று மணி வரை டாஸ்மாக் கடை திறக்கப்படாமல் இருந்ததை கண்டித்து மது பிரியர்கள் ஒன்று சேர்ந்து கடையை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து மூன்று முப்பது மணி அளவில் டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளர் சேகர் மற்றும் விற்பனையாளர் வெங்கடேசன் ஆகியோர் கடையை திறக்க வந்தனர். அப்போது கூடியிருந்த மது பிரியர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேரம் தவறி திறந்தது குறித்து கேள்வி எழுப்பினர். மேலும் விற்பனையாளர் வெங்கடேசன் மழைக்காலம் என்பதால் காலையிலேயே மது அருந்திவிட்டு படுத்துவிட்டதாக மது வாங்க வந்த குடிமகன்கள் தெரிவித்தனர். விற்பனையாளரை திருப்பி அனுப்பி விட்டு மேற்பார்வையாளர் சேகர் கடையை திறந்து விற்பனையை ஆரம்பித்த பின் தான் குடிமகன்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.