தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ரம்ஜான் வாழ்த்து

 
ks

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய மக்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கே.எஸ்.அழகிரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்திய சுதந்திரம் இதுவரை காணாத அளவில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தின்படி செயல்படுகிற மத்திய பா.ஜ.க. அரசு, இந்துத்வா கொள்கைகளை அனைத்து நிலைகளிலும் நடைமுறைப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. இதன்மூலம் சிறுபான்மையின மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிற வகையில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய சவால்மிக்க தருணத்தில் தான் சிறுபான்மை சமுதாயத்தினர் ரமலான் பண்டிகை கொண்டாடுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது. 

கடந்த ஒரு திங்களாக உணர்வு, பசி, தாகத்தை அடக்கி உண்ணா நோன்பிருந்த இஸ்லாமியர்கள் இன்று "ஈதுல் பித்ர்" என்னும் ஈகைத் திருநாளை பெருமகிழ்வுடன் கொண்டாடி திளைக்கின்றனர். ஏக இறைவனை வணங்கி, இல்லாதோருக்கு வழங்கி, எல்லா மக்களுடனும் இணங்கி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய சமாதானம், சமத்துவம், சகோதரத்துவம், சகவாழ்வு முறைகளை பின்பற்றி என்றும்போல் இன்புற்று வாழ பிரார்த்திக்கிறேன்.

Ks Azhagiri

பன்முக கலாச்சாரத்தின் அடிப்படையில் இந்தியாவிற்கென்று ஒரு கருத்தியலை மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, டாக்டர் அம்பேத்கார் போன்றவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இதற்கு சட்ட பாதுகாப்பு கொடுக்கிற வகையில் அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மத்தியில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் அரசமைப்புச் சட்டத்தின்படி தான் ஆட்சி செய்ய வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின்படி சிறுபான்மை மக்களுக்கு மதசுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்படுமேயானால் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் தலைமையில் நாடு முழுவதிலுமுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் ஓரணியில் திரண்டு சிறுபான்மை மக்களின் உரிமைகளை காப்பார்கள் என்பதை ரமலான் செய்தியாக தமிழக காங்கிரஸ் கட்சி கூற விரும்புகிறது  இந்த இனிய ஈகைத் திருநாளில் தக்பீர் முழக்கம் கூறி, தொழுது, அதற்கு முன்னர் ஏழைகளுக்கு “சதக்கத்துல் பித்ர்” என்னும் பெருநாள் கொடை வழங்கி, அனைவருடன் உணவருந்தி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் இனிய ரமலான் நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.