மக்களே உஷார்! உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

 
rain


தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் வருகிற மே 5-ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மே 4ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதி  மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் 5-ஆம் தேதி அந்த பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் இது மேலும் வலுப்பெற்று வரும் 6ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rain

இதனிடையே வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் (ஈரோடு, கரூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி), சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.