தமிழகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

 
Rain

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி,  திண்டுக்கல், ஈரோடு,  கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது. இடி, மின்னல் சமயத்தில் தரை காற்று மணிக்கு 40 முதல் 50  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம்,  தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், 9ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rain


 
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி  இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் வருகிற 09ம் தேதி வரை அந்த இடங்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.