தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்

 
Weather

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக,  இன்று மற்றும் நாளை தெற்கு கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், 3ம் தேதி முதல் 5-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. 

rain

மேலும் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,  அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுள்ளது.