துப்பாக்கி ஏந்துபவர்களுக்கு துப்பாக்கி மூலமே பதிலடி - ஆளுநர் ஆர்.என்.ரவி

 
ravi

நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக துப்பாக்கி ஏந்துபவர்களுக்கு துப்பாக்கி மூலமே பதிலடி கொடுக்க வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 

கேரள மாநிலம் கொச்சியில் நடந்த உள்நாட்டு பாதுகாப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். கருந்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:  நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராகப் பேசுபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது. ஆயுதக் குழுக்களுடன் கடந்த 8 ஆண்டுகளாக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. சரணடைய விரும்பும் குழுக்களுடன் மட்டுமே மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும்.துப்பாக்கி ஏந்துபவர்களுக்கு துப்பாக்கி மூலமே பதிலடி கொடுக்க வேண்டும்.

rn ravi

தொடர்ந்து பேசிய அவர், மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்தபோது, நாடு முழுவதும் அதிர்ச்சி அடைந்தது. ஒரு சில பயங்கரவாதிகளால் நாடு அவமானப்படுத்தப்பட்டது. தாக்குதல் நடந்த 9 மாதங்களுக்குள், அப்போதைய இந்திய பிரதமர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர், இரு நாடுகளும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறி கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டனர். பாகிஸ்தான் நட்பு நாடா? அல்லது எதிரி நாடா? என்பதில் தெளிவே இல்லாமல் ஒரு ஒப்பந்தமா?புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, பாலகோட் வான்வழியில் நாம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தோம். பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டால் அதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.