இந்திய அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி நடைபயணம் - கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

 
ks

இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரி சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை 75 கி.மீ. நடைப்பயணத்தை தமிழ்நாடு காங்கிரஸ் மேற்கொள்ளவுள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்திய அரசியல் சாசன அமைப்புகளின் மீது கடுமையான தாக்குதல்களை பா.ஜ.க. தொடுத்து வருகிறது. நீதித்துறை, தேர்தல் ஆணையம், மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என அனைத்து துறைகளையும் பா.ஜ.க. தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளைப் பறிக்கிற செயலாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் பழி வாங்கப்பட்டு வருகிறார்கள். இந்திய மக்களுக்கு இருக்கிற ஒரே பாதுகாப்பு இந்திய அரசமைப்புச் சட்டம்தான். இதன் மூலமே பொது மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் காப்பாற்றப்படும். 

Ks Azhagiri

இந்தப் பின்னணியில் இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக் கோரி சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை 75 கி.மீ. நடைப்பயணத்தை தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி., துறை, எஸ்.டி. துறை, பிற்படுத்தப்பட்டோர் துறை, ராஜிவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன், சிறுபான்மைத் துறை, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, அமைப்பு சாராத் தொழிலாளர் பிரிவு என எட்டு அமைப்புகள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இந்தப் பயணம் 3 நாட்கள் செப்டம்பர் 25, 26, 27 ஆகிய மூன்று நாள்களில் நடைபெற உள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க நடைப்பயணம் வருகிற செப்டம்பர் 25-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் தொடக்கி வைக்க இருக்கிறேன்.

இந்நிகழ்வில், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், திக்விஜய் சிங், சல்மான் குர்ஷித், ஜெய்ராம் ரமேஷ், அகில இந்திய காங்கிரஸ் முன்னணி அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் கே. ராஜூ மற்றும் அந்த அமைப்புகளின் தேசியத் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை ஆகியோர் பங்கேற்கிறார்கள். இந்தத் எழுச்சிமிக்க பயணத்தில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்று வெற்றிபெற அனைவரது ஆதரவையும் கோருகிறேன். இவ்வாறு கே.எஸ்.அழகிரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.