மாதம் ரூ.60,000 வருமானம் பெறுபவர்கள் ஏழைகளா? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

 
mk stalin

மாதம் ரூ.60,000 வருமானம் பெறுபவர்கள் ஏழைகளா? என அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வாய்ப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்ட திருத்தம் செல்லும் என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பினை அளித்திருக்கிறது.   இந்த நிலையில்  இந்த 10 சதவிகித இடம் ஒதுக்கீடு தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்துவதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. 10 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக கூறி அதிமுக கூட்டத்தை புறக்கணித்தது. இதேபோல் பாஜகவும் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்தது.

stalin

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இடஒதுக்கீட்டால் தகுதி போனது, திறமை போனது என சொல்லி வந்த சிலர் இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள். நூற்றாண்டு காலமாக போற்றி பாதுகாத்து வந்த சமூநீதி கொள்கைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. சாதியினால் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பை கொடுப்பதுதான் சமூக நீதி. இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை சேர்க்க கூடாது என ஜவஹர்லால் நேரு காலத்தில் பேசப்பட்டது. ஏழைகளுக்கான எந்த திட்டத்தையும் திமுக அரசு தடுக்காது. திமுக அரசின் பொரும்பாலான திட்டங்கள் ஏழை மக்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது தான். ஏழை மக்களின் வறுமையை போக்க மத்திய அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் திமுக அரசு ஆதரிக்கும். மாதம் வருமானம் ரூ.60 ஆயிரம் பெறுபவர்கள் ஏழைகளா. முன்னேறிய சமூகத்தை சேர்ந்த ஏழைகளுக்கான இடஒதுக்கீடு அல்ல இது. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.