மொழியை காக்க உயிரை கொடுத்த இனம் தான் தமிழ் இனம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

 
mk stalin

மொழியை காப்பாற்ற உயிரை கொடுத்த இனம்தான் நமது தமிழ் இனம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னை இலக்கிய திருவிழாவிற்கு கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. படைப்பரங்கம், பண்பாட்டு அரங்கம், கல்லூரி மாணவர்களுக்கான பயிலும் அரங்கம் மற்றும் சிறுவர்களுக்கான இலக்கிய அரங்கம் என 4 அரங்கங்களில் இந்த இலக்கிய திருவிழா அமைக்கப்பட்டுள்ளது.  சென்னை இலக்கிய திருவிழா இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 
இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடவுள்ளனர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.  இந்த இலக்கிய திருவிழாவின் தொடக்க விழா இன்று காலை 10 மணிக்கு அண்ணா நூற்றாண்டு நூலகம் மாநாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.இந்த விழாவில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  

mk stalin

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ் செம்மொழி மாநாடு திமுக ஆட்சியில்தான் நடத்தப்பட்டது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்தது கலைஞர்தான். மொழி என்பது ஒரு இனத்தினுடைய உயிர். இலக்கியம் என்பது ஒரு இனத்தினுடைய இதயம். மொழியை காப்பாற்ற உயிரை கொடுத்த இனம்தான் நமது தமிழ் இனம். மொழியை அறிவாலும், உணர்வாலும் வளர்க்க வேண்டும். இலக்கிய திருவிழா, தமிழ் மாநாடு போன்று நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழ் வளர்ச்சிக்காக திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எத்தனையோ திட்டங்களை கொண்டுவந்தாலும், சென்னையில் வள்ளுவர் கோட்டமும், குமரியில் வள்ளுவர் சிலையும் காலத்தால் அழியாத கம்பீரமான சின்னங்களாக இன்று வரை இருக்கின்றன. மொழியை பற்றால் மட்டும் வளர்த்துவிட முடியாது, அறிவால், உணர்வால் வளர்த்தாக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.