கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் - பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

 
mk stalin

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

திண்டுக்கல் அருகே காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இதற்காக மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் திண்டுகல் வருகை தந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசாக பொன்னியின் செல்வன் நாவல் புத்தகங்களை பரிசாக வழங்கினார். இதனை தொடர்ந்து காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார். இசையுலகில் இளையராஜா ஆற்றிய சேவையை பாராட்டி அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. மேலும் மாணவ-மாணவிகள் உள்பட மொத்தம் 2,314 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.  

modi

இந்த விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- காந்தி கூறிய கொள்கைகள் இந்தியாவை ஒழுங்குபடுத்தும் விழுமியங்களாக உள்ளன. வட இந்தியர் அனைவரும் தமிழைக் கற்க வேண்டும் என்று சொன்னவர் மகாத்மா காந்தி. மகாத்மா காந்தியை அரையாடை கட்டவைத்தது தமிழ் மண். உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 22 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்களும் கவனிக்கும் வகையில் தமிழகத்தின் கல்வித் திட்டங்கள் உள்ளன. கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.