பிரியாவின் உயிரிழப்புக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் - அண்ணாமலை பேட்டி

 
annamalai

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டிற்கு நேரில் சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர், பிரியாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர். 

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி பிரியா.  இவர் கால்பந்து வீராங்கனை.   பயிற்சியின்போது காலில் சவ்வு விலகியதை அடுத்து சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  அங்கு  மருத்துவர்களின் தவறான சிகிச்சை முறையினால் இரண்டு கால்களும் அகற்றப்பட்டு,  அதன் பிறகும் உயிரை காப்பாற்ற முடியாமல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக  உயிரிழந்தார். மருத்துவரின் தவறான சிகிச்சையினால்  பிரியா உயிரிழந்ததை அடுத்து சம்பந்தப்பட்ட இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.  சம்பவம் குறித்து போலீசாரின் விசாரணையும் நடந்து வருகிறது.   துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்க  தனியாக விசாரணை குழுவும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இறந்த மாணவி பிரியாவின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்ற தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரியாவின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர், ரூ.10 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலை, பிரியாவின் சகோதரருக்கு அரசு வேலைக்கான ஆணை, வீடு ஆகியவற்றை வழங்கினார்.

Annamalai


 
இந்நிலையில், பிரியாவின் வீட்டிற்கு நேரில் சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மாணவியின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பிரியாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை கூறியதாவது:- இந்தியாவில் மருத்துவ கட்டமைப்பு மிக நன்றாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழகம். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு நவடிக்கை எடுக்க வேண்டும். பிரியாவின் பெயரில் சென்னை முழுவதும் கால்பந்தாட்ட போட்டியை பாஜக நடத்த உள்ளது. பிரியாவின் சகோதரர்கள் தேர்வு செய்யும் 10 பெண்களின் பயிற்சிக்கான செலவை பாஜக ஏற்கும். பிரியாவின் சிகிச்சை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் முரண்பட்ட தகவல்களை தெரிவிக்கிறார். முதல் அமைச்சரின் தொகுதியில் உள்ள மருத்துவமனையில் இந்த தவறு நடந்துள்ளது. நிர்வாக கோளாறு காரணமாக ஒரு உயிர் பறிபோயுள்ளது. இந்த உயிரிழப்புக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும். அரசு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.