அ.தி.மு.க. தலைமையுடன் சசிகலா சந்திப்பா ? - தமிழ்மகன் உசேன் பரபரப்பு பேட்டி

 
Sasikala and tamil magan

சசிகலா அ.தி.மு.க. தலைமையை சந்திக்க உள்ளதாக கேலிகூத்தாக சொல்லி கொண்டு இருக்கிறார் எனவும், நிச்சயமாக அது நடைபெறுவதற்கு எந்த வாய்ப்புகளும் இல்லை எனவும்,  அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கூறியுள்ளார். 

திருவண்ணாமலை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அக்கட்சி சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்மகன் உசேன் பேசியதாவது:- எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 4½ ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி நடத்தினார். அதனை மக்கள் அனைவரும் அறிந்தது. ஆனால் தற்போது பொய் வாக்குறுதிகளை கண்டு ஏமாந்து விட்டோமே என்றும், தி.மு.க. அரசை எப்போது வீட்டிற்கு அனுப்புவது என்றும் மக்கள் ஏக்கத்தோடு உள்ளனர்.

ஈரோடு இடைத்தேர்தல் குறித்து எங்களுடைய தலைமை கழகமும், இடைக்கால பொதுச்செயலாளரும் முடிவு செய்வார்கள். இடைக்கால பொதுச்செயலாளர் நல்ல முடிவு எடுத்து இந்த கால கட்டத்தில் நல்ல வேட்பாளரை அறிவித்தால் நிச்சயமாக அ.தி.மு.க. ஈரோடு இடைத் தேர்தலில் வெற்றி வாகை சூடும். சசிகலா அ.தி.மு.க. தலைமையை சந்திக்க உள்ளதாக கேலிகூத்தாக சொல்லி கொண்டு இருக்கிறார். நிச்சயமாக அது நடைபெறுவதற்கு எந்த வாய்ப்புகளும் இல்லை. மேலும் தலைமை கழகத்தை சூறையாடிவர்களை மீண்டும் இந்த கட்சியில் சேர்ப்பது என்றால் கட்சி தொண்டர்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள் என்பது எனது கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.