காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இருந்த பிணைப்பை மோடி புதுப்பித்துள்ளார்- தமிழிசை

 
Tamilisai

காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் காலம்காலமாக இருந்த பிணைப்பை பிரதமர் நரேந்திர மோடி புதுப்பித்துள்ளார்  என்று தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

காசியில் நடைபெற்று வரும் தமிழ் சங்கமத்தில் பங்கேற்றபின் செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்த அவர், தமிழகத்திலிருந்து காசிக்கு வருகை தந்து வணக்கம் சொல்லும் வாய்ப்பை அளித்த பிரதமருக்கு நன்றி கூறினார். தமிழகத்தில் யாத்திரை செய்யும் எல்லோரும் காசி – ராமேஸ்வரம் என்ற சொற்றொடரை பயன்படுத்துவது மிகவும் பிரபலமானது.  ராமேஸ்வரத்திற்கு வந்தபின் காசிக்கு சென்று வணங்க வேண்டும் என்ற இணைப்பை, கலாச்சார, ஆன்மீக பிணைப்பை பிரதமர் ஏற்படுத்தித் தந்துள்ளார் என்று கூறினார்.

காசிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான பிணைப்பு இன்று, நேற்றல்ல காலம்காலமாக இருந்து வருவதாகும். இந்த இணைப்பை பிரதமர் தற்போது புதுப்பித்து தந்துள்ளார். இங்கு நடைபெறும் கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், நாதஸ்வரம் போன்ற கலாச்சார நிகழ்வுகளை பார்க்கும்போது கலை வடிவிலும் கூட தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் பிணைப்பு இருப்பது தெரிய வருகிறது என்றார் அவர். பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பிரதமர் தமிழ் இருக்கை அமைத்திருப்பதை சுட்டிக்காட்டிய டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், கங்கையை தூய்மைப்படுத்த தமக்கு கிடைக்கும் பரிசுப் பொருட்கள் விற்பனையின் மூலம் பெறப்படும் தொகையை செலவிடுவது பற்றியும் குறிப்பிட்டார்.

இந்தியா ஒற்றுமையாக இருப்பதற்கு காசி தமிழ் சங்கமம் மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருப்பதாகவும் அவர் கூறினார். மகாகவி பாரதியின் பேரனை காசியில் தாம் சந்தித்ததாகவும், காசி தமிழ் சங்கமம் குறித்து அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். முன்னதாக அங்குள்ள பாரதி சிலைக்கு அவர் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.