வீடியோ கால் டெக்னிக் மூலம் அப்பருக்கு சிவபெருமான் காட்சி: தமிழிசை

 
Tamilisai

வடக்கும் - தெற்கும் இணைந்து செயல்பட்டால் நாடு சுபிட்சம் அடையும், கம்பன் வடமொழியை கற்காவிட்டால் கம்ப ராமாயணம் நமக்கு கிடைத்திருக்காது. எனவே இன்னொரு மொழி கற்பதை யாரும் தடுக்க வேண்டாம் என தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

நான் தன்னிச்சையாக செயல்படவில்லை தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறேன் -  விமர்சனங்களுக்கு தமிழிசை பதிலடி


தியாகராஜரின் 176 ஆராதனை விழாவினை குத்துவிளக்கு ஏற்றி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்து மதத்தில் உள்ளது எல்லாம் அனைவரும் அறிந்ததா? அதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்கிறார்கள். அப்பருக்கு கைலாயத்தில் இருந்து கொண்டே சிவன் காட்சி கொடுத்துள்ளார். இன்று நாம் அனைத்தையும் வீடியோ கால் மூலம் காண்கிறோம். ஆனால் அன்றே சிவன், அந்த டெக்னாலஜியை பயன்படுத்தி அப்பருக்கு காட்சி கொடுத்துள்ளார். எனவே அனைத்தும் நம்பிக்கை மட்டுமல்ல, அதிகாரபூர்வமாக ஆதாரத்துடன் உள்ளது. நாம் எல்லா மதத்தையும் மதிக்க வேண்டும். மற்ற மதத்தில் உள்ள நல்லதுகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும், இதுதான் நமது கொள்கையாக இருக்க வேண்டும்.

தமிழிசை தெலுங்கும் பேசலாம், தெலுங்கு பேசும் நண்பர்கள் தமிழும் பேசலாம். அப்படிப்பட்ட சூழ்நிலை தான் தமிழகத்தில் இருக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன். வடக்கும் - தெற்கும் இணைந்து செயல்பட்டால் தான் நாடு சுபிட்சமாக இருக்கும் என்று அன்றே சொல்லி வைத்தார்கள். தமிழ் நமக்கு உயிர் தான். ஆனால் மற்ற மொழிகளையும் நாம் கற்க வேண்டும். அதனை மதிக்க வேண்டும். இன்னொரு மொழியை கற்கும் போது தான் தமிழில் உள்ள நல்லதை வடமொழியில் நம்மால் எடுத்துக் கூற முடியும். 

கம்பன் வட மொழியை கற்காவிட்டால், கம்பராமாயணம் நமக்கு கிடைத்திருக்காது. புதிய கல்விக் கொள்கையை தமிழிலும் - தாய் மொழியிலும் கற்றுக் கொள்ளுங்கள். பிற மொழியை கற்றுக்கொள்ள தயக்கம் காட்டக்கூடாது. இன்னொரு மொழியை கற்பதால் வாய்ப்புகள் நமக்கு அதிகமாக இருக்கிறது. மற்றொரு மொழியை கற்பதை யாரும் தடுக்க வேண்டாம்” என தெரிவித்தார்.