ஆளுநர் ரவி- முதல்வர் ஸ்டாலின் பிரச்சனை - கருத்து தெரிவிக்க விரும்பவில்லை: தமிழிசை

 
tamilisai

புதுச்சேரி  ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா இன்று, கலை  நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது. இதை முன்னிட்டு ஆளுநர் மாளிகை மா, கரும்பு உள்ளிட்ட அலங்கார பொருட்களால் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் கோலாகல பொங்கல் திருவிழா... உறியடித்து மகிழ்ந்த தமிழிசை..!

ஆளுநர் தமிழிசை, பொங்கல் வைத்து உறியடித்தும் பொங்கள் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் கிராமிய நடனம், கரகாட்டம், ஒயிலாட்டம், மானாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, புலி ஆட்டம், தப்பாட்டம், பம்பை உடுக்கை, உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தமிழரின் பாரம்பரியமான மாட்டு வண்டி ஊர்வலத்தை தொடங்கி வைத்த தமிழிசை, பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறுதானிய உணவை பரிமாறினார். விழாவில் சபாநாயகர்.செல்வம் அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சாய் சரவணன் குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயலர் ராஜு வர்மா, காவல்துறை தலைவர்கள், மாவட்ட ஆட்சியர், அரசுத்துறை உயர் அதிகாரிகள், பாமக,  பாஜக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அனைவரும்  தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் வேஷ்டி துண்டு சட்டை உடன் பங்கேற்றனர்.

பொங்கல் விழாவிற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை, “தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து எந்தவித கருத்தையும் நான் சொல்ல விரும்பவில்லை. புதுச்சேரியில் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது எனக்கும் வருத்தம் அளிக்கிறது. விலையை உயர்த்தாமல் நிறுவனத்தை லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் தனது எண்ணம். பல்வேறு மாநிலங்களிலிருந்து பால் கொள்முதல் செய்யப்படுவதால் புதுச்சேரியில் பால் தட்டுப்பாடு நிலவுகிறது, வரும் காலத்தில் பால் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக புதுச்சேரி திகழ வேண்டும்

தன்னிடம் எந்த கோப்புகளும் தேங்கி இருப்பதில்லை. தன்னிடம் வரும் கோப்புகள் அனைத்திற்கும் உடனுக்குடன் அனுமதி அளித்து வருகிறேன். புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறப்பது குறித்து, எந்த ஒரு கருத்தையும் தற்போது சொல்ல இயலாது. பெரும் தொகை அபராத விதிப்புக்கு பின்னரே மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.