ஆளுநர்கள் மக்களை சந்தித்தால் அரசியல்வாதிகளுக்கு குளிர் ஜுரம் - தமிழிசை கிண்டல்

 
tamilisai

ஆளுநர்கள் மக்களை சந்தித்தால் அரசியல்வாதிகளுக்கு குளிர் ஜுரம் ஏற்படுகிறது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேர் விடுதலை உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பதால் கருத்து சொல்ல முடியாது. ஆளுநர் தாமதம் தான் விடுதலைக்கு காரணம் என்றும் கூறமுடியாது. ஆளுநர் முடிவெடுப்பதில் சில சவால்கள் இருந்திருக்கலாம். சிறையில் இருப்பவர்களை விடுவிக்கும்போது பல மாநிலங்களில் முன் உதாரணமாக இருந்து விடக்கூடாது என்று ஆளுநர் அதை சவாலாக நினைத்து இருக்கலாம், ஆளுநருக்கு முடிவெடுப்பதில் சில காரணங்கள் இருந்து இருக்கலாம். எனவே நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.  ஆளுநர்களை பற்றி அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். இப்போது கவனம் ஆளுநர் பக்கம் திரும்பியுள்ளது. 

எல்லா ஆளுநர்களும் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, சட்டவிதிகளுக்கு உட்பட்டு தான் நடக்கின்றோம். இதில் விதிமீறல்கள் இல்லை. ஆனால் சின்ன சின்ன நடவடிக்கைகளை கூட விமர்சனம் செய்வது என சில அரசியல்வாதிகள் கிளம்பியிருக்கிறார்கள். அதில் சீத்தாராம் யெச்சூரியும் ஒருவர். அனைத்து ஆளுநர்களூம் மக்களுக்கு நல்லது செய்ய தான் அரசியல் அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். மக்களுக்கு நல்லது செய்வதற்காக தான் ஆளுநர்கள் உள்ளோம். ஆனால், ஆளுநர்கள் மக்களை சந்தித்தால் அரசியல்வாதிகளுக்கு குளிர் ஜுரம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.