மீண்டும் அரசியல் களத்தில் குதிக்கிறார் தமிழருவி மணியன்

 
தமிழருவி மணியன்

காந்திய மக்கள் இயக்கத்தை, காமராஜர் மக்கள் இயக்கமாக பெயரை மாற்றியுள்ள தமிழருவி மணியன், தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை மலர வைப்பதற்காக மீண்டும் அரசியலில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார். 

இனி நான் அரசியலில் ஈடுபட மாட்டேன்: தமிழருவி மணியன் | Hereafter will not  involve Politics say Tamilaruvi Manian | Puthiyathalaimurai - Tamil News |  Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

இதுதொடர்பாக தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பண அரசியலும், வெறுப்பு அரசியலும் முற்றுகையிட்டிருக்கும் தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த ஆரோக்கியமான நல்லரசியலை வளர்த்தெடுப்பது நம் கடமையாகும். நேர்மையும், நாணயமும், நல்லொழுக்கமும் நிறைந்த, ஊழலின் நிழல் கூடப் படியாத, எல்லா வகையிலும் வெளிப்படைத் தன்மை

கொண்ட, வளர்ச்சிப் பாதையில் மாநிலத்தை முன்னெடுத்துச் சென்ற பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியை மீண்டும் நிலை நிறுத்த அர்ப்பணிப்புடன் கூடிய மக்களை ஒன்றுதிரட்ட மிகக் கடுமையாக ஓர் தூய்மையான அரசியல் வேள்வியில் நாம் அனைவரும் ஈடுபட வேண்டும் என்பது காலத்தின் தவிர்க்க முடியாத கட்டாயமாகும். 

53 ஆண்டுகள் நேர்மை பிறழாமல், ஒழுக்கம் தவறாமல், அரசியலைப் பயன்படுத்தி ஒரு ரூபாயும் அறத்திற்குப் புறம்பாகச் சேர்க்காமல் காமராஜர் வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவன் நான். என் நெடிய அரசியல் பயணத்தில் இன்றுவரை ஓர் ஊராட்சித் தலைவர் தேர்தலில் கூட நான் நின்றதில்லை. என் இனம் மீண்டும் காமராஜரின் பொற்கால ஆட்சியைத் தரிசிக்க வேண்டும் என்பதற்கு மேல் எந்தக் கனவும் எனக்கில்லை. நான் எடுத்த ஒவ்வொரு முயற்சியும் வீணாகிப் போனதில் ஏற்பட்ட விரக்தியில் அரசியலை விட்டே விலகி நிற்பது என்று நான் முடிவெடுத்தது இமாலயத் தவறு என்று உணர்கிறேன். 

தன் பெண்டு, தன் பிள்ளை, சோறு, வீடு என்று சுயநலமாக வாழ என் மனச்சான்று அனுமதிக்கவில்லை. போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் என்று முழு அர்ப்பணிப்புடன் காமராஜர் ஆட்சியை மீண்டும் மலரச் செய்ய என்னை நான் முற்றாக அர்ப்பணித்துவிட்டேன். காமராஜர் ஆட்சி என்ற ஒற்றை இலக்கை நோக்கி நடக்க நான் உருவாக்கிய காந்திய மக்கள் இயக்கம், இன்று முதல் ' காமராஜர் மக்கள் இயக்கம் 'என்று பெயர் மாற்றம் பெறுகிறது. 

நல்லரசியல் இந்த மண்ணில் செழிக்க வேண்டும், வெறுப்பு அரசியலும், பண அரசியலும் அடியோடு அகற்றப்பட வேண்டும், ஊழல் நடைமுறைகள் களையப்பட வேண்டும், இனத்தின் நலன்களையும், மாநில உரிமைகளையும் பறி கொடுக்காமல் தேசிய ஒருமைப்பாட்டை வளர்த்தெடுக்க வேண்டும், சாதிகளுக்கிடையே சமரசமும், மதங்களுக்கிடையே நல்லிணக்கமும் மேன்மையுற வேண்டும் என்று சிந்திப்பவர்கள் அனைவரும் காமராஜர் மக்கள் இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொள்ள அன்புடன் அழைக்கிறேன். 

அரசியல் களம் வன்முறைக் காடாகிவிட்டது என்று கவலைப்படுபவர்கள், சகல தளங்களிலும் சிஸ்டம் சீரழிந்துவிட்டது என்று சிந்திப்பவர்கள், மாற்று அரசியலை நம் வாழ்காலத்தில் காண வேண்டும் என்று விழைபவர்கள் இனியும் மௌனப் பார்வையாளர்களாக இல்லாமல் வீட்டுக்கு ஒருவர் காமராஜர் மக்கள் இயக்கத்தில் இணைந்து செயலாற்ற அன்புடன் அழைக்கிறேன். அற்புதமான இளைஞர்கள் எனக்குத் தந்த ஊக்கமும், உள்வலியும், உற்சாகமும்தான் மீண்டும் என் அரசியல் பயணத்தைத் தொடங்கச் செய்திருக்கிறது. இதில் சமூக நலனன்றி, எள்ளளவும் சுயநலமில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.