குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் - தினகரன் வேதனை!!

 
ttv dhinakaran

முத்துக்குமரன் மற்றும் சின்னமுத்து புரவியான் ஆகியோரது குடும்பங்களுக்கு உரிய நீதியும், இழப்பீடும் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் இந்தியத் தூதரகத்தின் வழியாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ttv

திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் இடைத்தரகர் மூலம் குவைத் நாட்டிற்கு கடந்த 3ம் தேதி பணிக்காக சென்றுள்ளார். தூய்மை பணி வேலைக்கு சென்ற அவரை ஒட்டகம் மேய்ப்பதற்கு வற்புறுத்தியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், இது குறித்து தனது குடும்பத்திடம் தெரிவித்துள்ளார், அத்துடன் இந்திய தூதரகம் மூலம் நாடு திரும்பிட முத்துக்குமார் முயற்சித்து வந்த நிலையில்,  கடந்த 7ம் தேதி அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "திருவாரூர் மாவட்டம், லட்சுமாங்குடியைச் சேர்ந்த திரு.முத்துக்குமரன் என்பவர், வேலைக்குச் சென்ற சில தினங்களிலேயே குவைத் நாட்டில், சித்ரவதை செய்து சுட்டுக்கொல்லப்பட்டதாக வரும் செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

இதே போல திருச்சி வடக்கு சித்தாம்பூர், காவேரிபாளையத்தைச் சேர்ந்த திரு.சின்னமுத்து புரவியான் என்பவர் சவுதியில் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக அவர்கள் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த துயர நிகழ்வுகள் குறித்து வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சரோ, தமிழக அரசோ இதுவரை கண்டுகொண்டதாக தெரியவில்லை.

tn

முத்துக்குமரன் மற்றும் சின்னமுத்து புரவியான் ஆகியோரது குடும்பங்களுக்கு உரிய நீதியும், இழப்பீடும் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் இந்தியத் தூதரகத்தின் வழியாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, முதலமைச்சர் அவர்கள் இதில் நேரடியாக தலையிட்டு குவைத் மற்றும் சவுதியிலிருந்து இருவரின் உடல்களை தமிழகத்திற்கு கொண்டுவருவதற்கும், அவர்களது குடும்பத்திற்கு இழப்பீடு பெற்றுத் தருவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இத்தகைய துயரச் சம்பவங்கள் இனி நடைபெறாதபடி தடுப்பதற்கு வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறையின் சார்பில் உரிய நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.