கர்நாடகாவில் தமிழக கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடுமை - ஆதார் அட்டையால் பறிபோன 3 உயிர்

 
Karnataka issue

கர்நாடகாவில், ஆதார் அட்டை இல்லாததால் தமிழக பெண்ணிற்கு பிரசவம் பார்க்க மாவட்ட அரசு மருத்துவமனை மறுத்த நிலையில், அந்த கர்ப்பிணி இரட்டை சிசிவுடன் உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தை சேர்ந்த கஸ்தூரி என்ற பெண் தனது கணவர் மற்றும் 7 வயது மகளுடன் கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள துமகூரு டவுன் பாரதிநகர் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில், அவரது கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில், தனது மகளுடன் தனியாக வசித்து வந்த கஸ்தூரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கஸ்தூரிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் கஸ்தூரியை மீட்டு துமகூரு டவுனில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற நிலையில்,  பணியில் இருந்த பெண் மருத்துவர் உஷா, கஸ்தூரியிடம் தாய்-சேய் பாதுகாப்பு அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை கேட்டு உள்ளனர். ஆனால் கஸ்தூரியிடம் அந்த 2 அட்டைகளும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் ஈவு இரக்கமில்லாத அந்த பெண் மருத்துவர், பிரசவவலியால் கஸ்தூரி துடித்த போதிலும் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துள்ளார். மேலும் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி அந்த பெண் மருத்துவர் கூறியுள்ளார். 

pregnent

தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்கு கஸ்தூரியிடம் பணம் இல்லாததால் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர் அக்கம் பக்கத்தினர். இந்நிலையில், நேற்று காலை மீண்டும் கஸ்தூரிக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், ஒரு சிசு முழுமையாக வெளிவந்த நிலையிலும், மற்றொரு சிசு பாதி வெளியே வந்த நிலையிலும் அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டு கஸ்தூரி உயிரிழந்தார். மேலும் அந்த இரு சிசுக்களும் பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் நாட்டையே உளுக்கிய நிலையில், இதுபற்றி அறிந்ததும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி மஞ்சுநாத்தும், கஸ்தூரியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். ஆதார் அட்டை இல்லை என கூறி கஸ்தூரியை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க மறுத்து 3 உயிர்கள் பலியாக காரணமாக இருந்த டாக்டர் உஷா  அன்று பணியில் இருந்த செவிலியர்கள் யசோதா, சவிதா, வித்யாபாரதி ஆகியோரை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். தகவல் அறிந்ததும் மாவட்ட மருத்துவமனைக்கு விரைந்த சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர், மாவட்ட கலெக்டர் ஒய்.எஸ்.பாட்டீல், டிஎச்ஓ டாக்டர் மஞ்சுநாத் மற்றும் பிற அதிகாரிகளிடம் இருந்து தகவல் பெற்றார்.  இறந்த கஸ்தூரியின் முதல் பெண் குழந்தை காப்பகத்தில் சேர்க்கப்படும் எனவும், அந்த குழந்தைக்கு 18 வயது வரை இலவச மருத்துவம், கல்வி மற்றும் தங்குமிடம் வழங்க முதல்-மந்திரியிடம் கோரிக்கை வைக்கப்படும்  எனவும் கூறினார்.