தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் திங்கள் கிழமை தொடக்கம்

 
tn assembly

இந்தாண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற திங்கள் கிழமை தொடங்கவுள்ளது. 

ஒவ்வொரு வருடமும் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற திங்கள் கிழமை, அதாவது நாளை மறுநாள் தொடங்க உள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. அதன்படி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 10 மணிக்கு உரையாற்றி கூட்டத்தொடரை தொடங்கி வைக்க உள்ளார்.  அவர் உரையாற்றி முடிந்ததும் சபாநாயகர் அப்பாவு தமிழாக்கத்தை வாசிப்பார்.  ஆளுநர் உரை முடிந்ததும் ஆளுநர் ஆர்.என்.ரவியை மரபுபடி வழியனுப்பி வைப்பார்கள். அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெறும். அதில் சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்வார்கள். 

இதனை தொடர்ந்து 10ம் ந்தேதி சட்டசபை கூடியதும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டத்தை ஒத்திவைக்க வாய்ப்புள்ளது. சட்டசபை கூடுவதை முன்னிட்டு பேரவை வளாகத்தை சுத்தப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது. நாளை வரை சட்டசபை முழுவதையும் சுத்தப்படுத்தி தயார்படுத்த உள்ளனர். ஒலிப்பெருக்கிகளை சோதனை செய்து வருகிறார்கள். இந்த கூட்டத்தொடரில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் விவகாரம் எழுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.