பழங்குடியின பாதுகாப்பு சங்க நிர்வாகிகளுக்கு இழப்பீடு - தமிழக அரசு அரசாணை..

 
தமிழக அரசு


கடந்த  ஆட்சியில் காவல் நிலைய சித்ரவதைக்கு ஆளான பழங்குடியின பாதுகாப்பு சங்க நிர்வாகிகளுக்கு   இழப்பீட்டு தொகை வழங்க தமிழக அரசு  அரசாணை வெளியிட்டுள்ளது.  

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் பொம்பூர் கிராமத்தை சேர்ந்த பழங்குடி இருளர் மோகன் என்பவரை 2019ம் ஆண்டு மே மாதம் மயிலம் காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில், அப்போதைய எஸ்ஐ விவேகானந்தன் அடித்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மோகன் அன்று இரவே திண்டிவனம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

பழங்குடியின பாதுகாப்பு சங்க நிர்வாகிகளுக்கு இழப்பீடு - தமிழக அரசு அரசாணை..

இச்சம்பவம் தொடர்பாக புகார் தயாரிக்க உதவிய பழங்குடியின இருளர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் பிரபா கல்விமணி, முருகப்பன் ஆகிய இருவரையும் மயிலம் காவல்நிலைய எஸ்ஐ விவேகானந்தன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இதனிடையே, காவல் நிலைய சித்ரவதையால் பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர் மோகனுக்கு நீதி கிடைத்திட புகார் மனு எழுத உதவிய இருவரையும் கைது செய்து, பொய் வழக்கு பதிவு செய்த மயிலம் எஸ்ஐ விவேகானந்தன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் கண்காணிப்பகம் இயக்குநர் வழக்கறிஞர் ஹென்றிடிபேன் உள்ளிட்டோர் மாநில மனித உரிமை ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பியிருந்தனர்.

பணம்

இம்மனுவை விசாரித்த மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், மனித உரிமை மீறலில் ஈடுபட்ட எஸ்ஐ விவேகானந்தனுக்கு ரூ.50,000 அபராதம் விதித்து, அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு 11.05.2022 அன்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். இதனை ஒரு மாதத்திற்குள் பிரபா கல்விமணி, முருகப்பன் ஆகிய இருவருக்கும் தலா ரூ.25,000 தமிழக அரசு வழங்கவேண்டும் என்றும், இத்தொகையினை பின்னர் எஸ்ஐ விவேகானந்தனிடமிருந்து வசூலிக்குமாறும், மனித உரிமை மீறலில் ஈடுபட்ட அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்றும் மனித உரிமை ஆணையம் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், மனித உரிமை ஆணைய உத்தரவின்படி பிரபா கல்விமணி, முருகப்பன் இருவருக்கும் தலா ரூ.25,000 வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.