மதுரையில் ‘ஆடி அம்மன் சுற்றுலா’ - தமிழக அரசு அறிவிப்பு ..

 
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

ஆடி மாதத்தையொட்டி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், இந்து சமய அறநிலையத்துறை இணைந்து மதுரையில் ‘ஆடி அம்மன் சுற்றுலா’ நடத்தி வருகிறது.

அம்மன் கோயில் - ஆன்மீக சுற்றுலா

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி, சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில், காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ‘ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா’ நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கு ஆடி மாதத்தில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். மதுரையில் பல்வேறு குடும்பத்தினர் பங்கேற்ற ஆடி அம்மன் சுற்றுலா தொடர்ந்து நடந்து வருகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

அழகர்கோவில் ரோட்டில் உள்ள தமிழ்நாடு ஓட்டலில் துவங்கும் இச்சுற்றுலா மீனாட்சியம்மன் கோயில், தெப்பக்குளம் வண்டியூர் மாரியம்மன் கோயில், மடப்புரம் காளியம்மன் கோயில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில், வெட்டுடையார் காளியம்மன் கோயில், அழகர்கோயில் ராக்காயி அம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கு அழைத்து செல்லப்பட்டு, சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும் அனைத்து கோயில்களின் பிரசாதமும், மதிய உணவும் வழங்கப்படுகிறது. குறைந்த கட்டணத்திலான இச்சுற்றுலாவில் பங்கேற்க விரும்புவோர் www.ttdconline.com என்ற இணையத்தில் பதியலாம். தமிழ்நாடு ஓட்டல், அழகர்கோவில் ரோடு, மதுரை-2 முகவரியிலும் பதிவு செய்யலாம். கூடுதல் விபரங்களை ‘91769 95841’ என்ற எண்ணில் பேசியும் அறியலாம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.