4 லட்சம் ரூபாய்க்கு கேமரா வைத்திருந்தால்தான், ஒரு பத்திரிக்கையாளர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வாரா ?

 
tn

அண்ணாமலை நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு ஊடகவியலாளர்களும், பத்திரிகை மன்றமும் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  "தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்தி வருவதையும், டிஜிட்டல் ஊடகங்களின் செய்தியாளர்களை மிரட்டி வருவதையும் தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகம் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. கமலாலயத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்களை ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் சென்னையில் பாஜக அலுவலகமான அவர்களுடைய அடையாளங்களைக் கேட்டு மிரட்டல் தொனியில் பேசியுள்ளார். மேலும் கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளர்கள் டிஜிட்டல் மீடியா சேனல்களில் பணிபுரிபவர்களாக இருந்தால், அவர்களை அவமரியாதை செய்து இழிவுபடுத்துவதை தொடர் நடவடிக்கையாக அண்ணாமலை அவர்கள் வைத்திருக்கிறார். 40,000 ரூபாய் கேமரா வைத்துக்கொண்டு, யூடியூபில் ஒரு சேனல் வைத்துக்கொண்டு நீங்களெல்லாம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் உட்கார்ந்துகொண்டு பத்திரிக்கையாளர் என்று சொல்கிறீர்களா என்று அவமதித்ததுடன், இனிமேல் யூடியூப் சேனல்களை அனுமதிக்காதீர்க என்றும் அதட்டலாக பேசியிருக்கிறார்.

annamalai

40,000 ரூபாய் கேமரா வைத்திருப்பவர்களுக்கு பதில் சொல்ல முடியாதென்றால், அண்ணாமலை அவர்கள், தான் கட்டியிருக்கும் விலை உயர்ந்த கைக்கடிகாரத்தைப் போல 4 லட்சம் ரூபாய்க்கு கேமரா
வைத்திருந்தால் தான் ஒரு பத்திரிக்கையாளர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வாரா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாது. ஊடகம் என்பதற்கும், ஊடகவியலாளர் என்பதற்குமான வரையறை
சாட்டிலைட் ஊடகங்களில் ஊழியர்களாக பணிபுரிபவர்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதல்ல என்பது அண்ணாமலை அவர்களுக்கு தெரியாதா? தொழில்நுட்ப மாற்றங்கள் விரைந்து நடைபெற்று வரும் இன்றைய உலகில் டிஜிட்டல் மீடியாக்கள் தான் உலகளவில் பல விவாதங்களை உருவாக்கியிருக்கின்றன என்பதனை அண்ணாமலை அவர்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறோம்.

Annamalai

அண்ணாமலை டிஜிட்டல் ஊடகங்களைச் சேர்ந்தவர்களைத் தவறாகப் பேசும்போது, புதிய தலைமுறை நிறுவனத்தின் செய்தியாளரும் அண்ணாமலைக்கு ஆதரவாக நாங்களும் யூடியூப் சேனல்களை அனுமதிக்காதீர்கள் என்று சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம், நீங்கள் தான் அனுமதிக்கிறீர்கள் என்று டிஜிட்டல் மீடியா ஊடகவியலாளர்களை அவமானப்படுத்தியுள்ளார். புதிய தலைமுறை நிர்வாகமும் ஒரு டிஜிட்டல் ஊடகத்தினை நடத்திக் கொண்டிருக்கிறது என்ற அடிப்படையில் தனது ஊடகவியலாளரின் இந்த கருத்தை அந்நிறுவனம் ஏற்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகம் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது. புதிய தலைமுறை நிறுவனத்தின் செய்தியாளரை அண்ணாமலை அவர்கள் இழிவுபடுத்திய போது, அவருக்கு ஆதரவாக டிஜிட்டல் மீடியாக்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் தான் பேசியிருக்கிறார்கள். ஆனால் புதிய தலைமுறை செய்தியாளரோ டிஜிட்டல் மீடியா ஊடகவியலாளர்களை கொச்சைப்படுத்தியுள்ளார். இது ஒரு தவறான போக்கு என்பதனை இச்சங்கம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பத்திரிக்கையாளர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லவும், பதில் சொல்லாமல் கடக்கவும் கூட அண்ணாமலை அவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் கேள்வி கேட்கும் ஊடகவியாளரை தனிப்பட்ட முறையில் நீ யார் என்று மிரட்டுவதும், கேட்கப்படும் கேள்விகளுக்கு உள்நோக்கம் கற்பிக்க முயல்வதும் அரசியல் நாகரீகமற்ற போக்காகும். ஒரு அரசியல் தலைவராக நடந்து கொள்ளாமல், ஜனநாயகமற்ற முறையில் ஊடகவியலாளர்களையும், குறிப்பாக டிஜிட்டல் மீடியா ஊடகவியலாளர்களையும் கொச்சைப்படுத்தி வரும் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை தமிழ்நாடு டிஜிட்டல் ஊடகம் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளது.