இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம் - தமிழக சட்டப்பேரவை நாளை வரை ஒத்திவைப்பு

 
appavu

தமிழக சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது.  நேற்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல் உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார். அதுமட்டுமின்றி, 'சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதில் தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது' என்ற வாக்கியத்தையும் தவிர்த்தார்.  ஆளுநரின் செயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார் மேலும் ஆளுநர் உரையை கண்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் தாமாக பேசிய வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே முதலமைச்சர் பேசிக்கொண்டிருந்த போது ஆளுநர் ஆர்.என்.ரவி அவையில் இருந்து பாதியில் வெளியேறினார். இதனால் நேற்று சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே சட்டசபை கூட்டம் 13-ந்தேதி வரை நடைபெறும் என்று  சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

tn assembly

இந்நிலையில்,  சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ஆம் நாள் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. சட்டசபையில் இன்று முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிரபலமானோரின் மறைவு குறித்து இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அந்த வகையில், தமிழறிஞர் க.நெடுஞ்செழியன், திரைப்பட வசன கர்த்தா ஆரூர்தாஸ், அவ்வை நடராஜன், ஓவியர் மற்றும் எழுத்தாளர் மனோகர் தேவதாஸ், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத்தலைவர் மஸ்தான், பிரபல கால்பந்தாட்ட வீரர் பீலே, காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா ஆகியோரின் மறைவு குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவுக்கு சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் மெளன அஞ்சலி செலுத்தினர்.