ஓபிஎஸ்க்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை திரும்பபெறுக! டிஜிபி அலுவலகத்தில் மனு

 
ops

ஓ.பி.எஸ்க்கு வழங்கப்பட்டுள்ள தனி போலீஸ் பாதுகாப்பை பின்வாங்க வலியுறுத்தி அ.தி.மு.க-வின் ஆதிராஜாராம் டி.ஜி.பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

ஓரங்கட்டப்படுகிறாரா ஓபிஎஸ்?- Dinamani

கடந்த 11 ஆம் தேதி அ.தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டம், வானகரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதே நேரம் சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க அலுவலகத்தில் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தரப்பினரிடையே கடும் கோஷ்டி மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. அப்போது தனது ஆதரவாளர்களுடன் வந்த ஓ.பி.எஸ் அ.தி.மு.க அலுவலகத்தில் இருந்து  சில ஆவணங்களை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. கலவரத்தில் 45-க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் ஓ.பி.எஸ்-க்கு வழங்கப்பட்டுள்ள தனி போலீஸ் பாதுகாப்பை பின்வாங்க வலியுறுத்தி அ.தி.மு.க தென்சென்னை வடக்கு(கிழக்கு) மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம் டி.ஜி.பி அலுவலகத்தில் இன்று புகார் அளித்தார். புகார் அளித்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  “ஓ.பி.எஸ் முன்னாள் முதல்வர் என்ற முறையில் காவல்துறை வழங்கியுள்ள தனி போலீஸ் பாதுகாப்பை தவறாக பயன்படுத்தியுள்ளார். குறிப்பாக ஓ.பி.எஸ் தனக்கு வழங்கியுள்ள பாதுகாப்புப் போலீசாரின் உதவியுடன், போலீஸ் வாகனத்திலேயே கற்கள், பெட்ரோல் குண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை எடுத்து வந்து, தனி பாதுகாப்பு போலீசாரின் உதவியுடனேயே அ.தி.மு.க அலுவலகத்தில் இருந்து ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றார். தமிழக காவல்துறை உரிய சட்ட வழிமுறையின்படி நடவடிக்கை எடுத்து ஓ.பி.எஸ்-க்கு வழங்கியுள்ள தனி போலீஸ் பாதுகாப்பை பின்வாங்க வேண்டும். மேலும், அப்படி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தாங்கள் நீதிமன்றத்தை நாடி சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடருவோம். 

ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு காவல் நிலையங்களில் அ.தி.மு.க சார்பில் அளிக்கப்பட்ட புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக புகார் அளித்த 2 பகுதிச் செயலாளர் உட்பட 14 பேரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்” எனக் கூறினார்.