மின் கட்டண உயர்வு.. மத்திய அரசை குறைகூறுவதை விடுங்கள் - டிடிவி தினகரன் காட்டம்..

 
ttv dhinakaran

மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசை குறை சொல்வதை விட்டுவிட்டு,  மக்களை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  அமமுக பொதுச்செயலாளர்  டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.  

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அமமுக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது  நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அதிமுக உட்கட்சி சண்டை பற்றி எதற்கு பேசிக் கொண்டு இருக்க வேண்டும் என்றும்,  எல்லாம் தானாக முட்டி மோதி ஒரு முடிவுக்கு வரும். அப்போது பேசலாம் என்றார்.  தொடர்ந்து , அதிமுகவில் இபிஎஸும், ஓபிஎஸும்  நிர்வாகிகளை நீக்குவது,  மாற்றுவது பற்றி அந்த கட்சி தொண்டர்களிடம் தான் கேட்க வேண்டும் என்றும்,  சம்பந்தமே இல்லாத என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்றும் தெரிவித்தார்.  

eb

 மேலும்,  கலைஞர் பேனா நினைவுச் சின்னம் குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர்,  “அர்ப்பர்களுக்கு  வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பார்கள் என்று தான் கேள்வி பட்டு இருக்கிறோம். ஆனால் கடலில் பேனாவை நட்டு வைப்பதை இப்போது தான் பார்க்கிறோம். இது போன்ற வெற்று விளம்பரங்களால் தான் திமுகவை மக்கள் ஆட்சி பொறுப்பில் இருந்து இறக்குவார்கள். கடந்த எடப்பாடி அண்ணன் ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட கோபத்தால்  தான்  விடியல் ஆட்சி வந்தது. விடியல் ஆட்சிக்கும்  மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்” என்றார்.  

TTV Dhinakaran

தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன், “மின் கட்டணம் உயர்வை திரும்ப பெற வேண்டும். மத்திய அரசை குறை சொல்வதை விட்டு தமிழக அரசு ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிக்காத வகையில் திரும்ப பெற வேண்டும். கடன் வேண்டும் என்றால் மின் கட்டணத்தை உயர்த்துங்கள் என மத்திய அரசு சொல்லி இருக்கிறது. கடன் வேண்டாம் என்று சொல்லி விட்டு தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை காண வேண்டும்.  கடன் தேவை என்பதால் மின் கட்டணத்தை உயர்த்த சொல்லி இருக்கலாம். கடன் வேண்டும் என்பதற்காக திமுக அரசு மின்கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது.” என்று குறிப்பிட்டார்.