"பகுதி நேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் " - தினகரன் வேண்டுகோள்

 
ttv dhinakaran

பகுதி நேர ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

stalin

பொங்கல் பண்டிகையையொட்டி ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு  மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கும் வகையில்  'சி' மற்றும் 'டி' பிரிவைச் (C & D Group) சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தொகுப்பூதியம், சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள், மற்றும் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்து சில்லறை செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் 1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.


இதுக்குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். 11 ஆண்டுகளுக்கு மேலாக பகுதி நேர ஆசிரியர்களாக மிகக்குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் அவர்களும் பண்டிகை நேரத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.  போனஸ் மட்டுமின்றி தி.மு.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்தது போல பகுதி நேர ஆசிரியர்களை திரு.ஸ்டாலின் அரசு பணிநியமனம் செய்ய வேண்டும். எத்தனையோ வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டதைப் போன்று இந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் ஆசிரியர் சமூகத்தை ஏமாற்ற நினைக்கக் கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்